வேலூர்: ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த தென்கடப்பந்தாங்கல் பகுதியில் வி.எல். 81 நகர கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில், பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகாரை அடுத்து கூட்டுறவு தணிக்கை துறையினர் கடந்த ஆண்டு தணிக்கை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது, பல்வேறு முறைகேடுகள் வெளியே வந்துள்ளது. அந்த வகையில், கடந்த 2018ஆம் ஆண்டு முதல் ஓய்வு பெற்றவர்களை பணியில் இருப்பதாக கூறி மாத மாதம் அவர்களுக்கு சம்பளம் கொடுப்பதாக கணக்கு காட்டப்பட்டு அந்த பணத்தை எடுத்துள்ளனர்.
அதேபோல, 2021ஆம் அண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரையில் கூட்டுறவு சங்கத்தில் உள்ள உறுப்பினர்களின் பெயரில் அவர்களுக்கே தெரியாமல் அவர்களின் ஆவணங்களை பயன்படுத்தி கடன் பெற்றது, போலியான ஆவணங்களை வைத்து கடன்பெற வழிவகை செய்தது, வைப்பு நிதியை கையாடல் செய்தது, சங்க செலவினங்களை அதிகப்படுத்தி போலியாக கணக்கு எழுதியது என பல்வேறு மோசடிகள் நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த போலி ஆவணங்கள் மற்றும் கணக்கு காட்டுதல் மூலமாக மொத்தம் 7 கோடியே 81 லட்சத்து 452 ரூபாய் மோசடி செய்துள்ளது தெரியவந்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுமட்டும் அல்லாது, இந்த மோசடியில் தென்கடப்பந்தாங்கல் நகர கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் சங்கர் மற்றும் எழுத்தர் பாரதி ஆகியோர் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது.