சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா கடந்தாண்டு உயிரிழந்தார். இதன் காரணமாக இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணிக் கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெராவின் தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி அடைந்தார்.
தொடர்ச்சியாக சட்டமன்ற பேரவை நிகழ்ச்சிகளிலும், அரசியல் நிகழ்வுகளிலும் பங்கேற்று வந்த இளங்கோவனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பினார்.
இந்த நிலையில், சமீபத்தில் மீண்டும் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருந்தபோதிலும் நோயின் தீவிரம் மற்றும் வயது முதிர்வு காரணமாக ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த 14 ஆம் தேதி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள், திரைபிரபலங்கள் என பலரும் இளங்கோவன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.பின்னர் அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: தனித்தேர்வர்கள் பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!
இந்த நிலையில், ஈவிகேஎஸ் உயிரிழந்ததைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக தமிழக சட்டப்பேரவை செயலகம் அறிவித்து தேர்தல் ஆணையத்துக்கு இன்று தெரியப்படுத்தியுள்ளது.
ஒரு தொகுதி காலியானதாக அறிவித்த நாளில் இருந்து 6 மாதத்திற்குள்ளே இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். இந்த சூழ்நிலையில் விரைவில் டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட உள்ளது. அந்த தேர்த்தலுடன் சேர்த்து ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.