தமிழ்நாடு

tamil nadu

தமிழக சட்டப்பேரவை தொடங்கியது.. இன்று ஆளுநர் உரை மீதான விவாதம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 13, 2024, 10:02 AM IST

Updated : Feb 13, 2024, 10:22 AM IST

TN Assembly: இன்று கூடியுள்ள தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்புகள், முக்கிய பிரமுகர்களுக்கு இரங்கல் தீர்மானங்கள் மற்றும் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெறுகிறது.

தமிழக சட்டப்பேரவை தொடங்கியது.. இன்று ஆளுநர் உரை மீதான விவாதம்!
தமிழக சட்டப்பேரவை தொடங்கியது.. இன்று ஆளுநர் உரை மீதான விவாதம்!

சென்னை: நடப்பு ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் என்பதால், நேற்று (பிப்.12) ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. இதன் அடிப்படையில், சென்னை தலைமைச் செயலகத்துக்கு வந்த ஆளுநருக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர், சட்டப்பேரவைக்குள் ஆளுநர் வந்து தனது இருக்கையில் அமர்ந்தார். இதன் பின்னர், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டு, சட்டப்பேரவை தொடங்கியது.

இதனையடுத்து, அவையில் உள்ளவர்களை வரவேற்று தமிழில் பேசிய ஆளுநர், ஆளுநர் உரையில் இடம் பெற்றிருந்த திருக்குறளையும், அதன் விளக்கத்தையும் படித்துவிட்டு, அடுத்த சில நிமிடங்களில் தனது உரையை முடித்தார். இதனைத் தொடர்ந்து, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு முழுவதுமாக படித்தார். இதன் பிறகு, அவை முன்னவரும், அமைச்சருமான துரைமுருகன், ஆளுநர் உரை அச்சிடப்பட்டதன் படியே அவைக் குறிப்பில் இடம் பெற வேண்டும் என்ற தீர்மானம் குறித்து பேசத் தொடங்கையில், ஆளுநர் அங்கிருந்து வெளியேறினார்.

இதனையடுத்து, அவையில் இருந்து வெளியேறியது குறித்து ஆளுநர் மாளிகையும், சட்டப்பேரவையில் ஆளுநர் நடந்து கொண்டது மற்று ஆளுநர் உரை குறித்து சபாநாயகர் அப்பாவு மற்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆகியோரும் விளக்கம் அளித்தனர். மேலும், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் தனது கருத்தை ஊடகங்களின் வாயிலாக பதிவு செய்திருந்தார். இந்த நிலையில், இன்று ஆளுநர் உரை மீதான விவாதம் இன்று நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நடைபெறுகிறது.

இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுகள்: இன்று கூடும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலில், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் ஆர்.வடிவேல், தெய்வநாயகம், தங்கவேல், துரை ராமசாமி, கு.க.செல்வம் மற்றும் எஸ்.ராசசேகரன் ஆகியோருக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படுகிறது.

அதே போன்று, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் எஸ்.வெங்கிடரமணன், கண் மருத்துவர் எஸ்.பத்ரிநாத், தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி, தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும், ஒடிசாவின் முன்னாள் ஆளுநருமான எம்.எம்.ராஜேந்திரன் மற்றும் தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு மெளன அஞ்சலி செலுத்தப்படும்.

இதனையடுத்து, தமிழ்நாடு சட்டப்பேரவை விதி எண் 9(1)-இன் கீழ் மாற்றுத் தலைவர்கள் பட்டியலை பேரவைத் தலைவர் அறிவிப்பார். இதனைத் தொடர்ந்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராஜேந்திரன் முன்மொழிவார். இதனைத் தொடர்ந்து, அதன் மீதான விவாதம் நடத்தப்படும். இதனிடையே, சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு உரிய துறை அமைச்சர்கள் பதிலளிப்பர்.

இதையும் படிங்க:அவைக்குறிப்பில் இருந்து நீக்கிய வீடியோவை வெளியிட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

Last Updated : Feb 13, 2024, 10:22 AM IST

ABOUT THE AUTHOR

...view details