கோயம்புத்தூர்:நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கடந்த பிப்.11ஆம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டம் (Citizenship Amendment Act, 2019 - CAA) நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் அமல்படுத்தப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து, மார்ச் 11ஆம் தேதி சிஏஏ சட்டம் மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டதாக அறிவிப்பு வெளியானது முதல் தமிழ்நாடு, கேரளா, அஸ்ஸாம், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அதோடு, இச்சட்டத்தை தங்களது மாநிலங்களில் அமல்படுத்தமாட்டோம் எனவும் கூறிவருகின்றனர்.
இந்த நிலையில், சிஏஏ சட்டத்தை ரத்து செய்யக் கோரி கோவை மத்திய மாவட்ட எஸ்டிபிஐ (SDPI) கட்சியின் சார்பாக உக்கடம் வள்ளியம்மை பேக்கரி முன்பாக "மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்" நடைபெற்றது. அதில், பாஜகவுக்கு எதிராகவும், தேர்தல் பத்திர விவகாரத்தை மறைக்கவே இந்த சிஏஏ சட்டம் அமல்படுத்தப்பட்டதாகவும், சிஏஏவை ரத்து செய்ய வேண்டும் எனவும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.
முன்னதாக, கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவில், "வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்னதாக இந்தியாவுக்கு அகதிகளாக வந்த இந்துக்கள், பாரசீகர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் ஆகிய அகதிகளுக்குக் குடியுரிமை வழங்க இச்சட்டம் வழிவகை செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த சட்டத்தில் பல்லாண்டு காலமாக வாழும் இஸ்லாமியர்கள், இலங்கைத் தமிழர்கள் ஆகியோர் குறித்து தகவல்கள் ஏதும் இடம்பெறாமல் இருந்தது நாடெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.