தென்காசி:செங்கோட்டை பகுதியில் அமைந்துள்ள காமாட்சி தெருவில் வசித்து வரும் செல்வகுமார் ஜெயலட்சுமி தம்பதியின் 8 வயது மகன் அசோக் குமார். இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று(திங்கட்கிழமை) மதியம் பள்ளியில் வைத்து வீட்டிலிருந்து கொண்டு வந்த உணவை உண்டதாகவும், இதனால் சிறுவனுக்கு தொடர் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து முதற்கட்ட சிகிச்சைக்காக சிறுவனை செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் போதிய மருத்துவ வசதி இல்லாத காரணத்தால் மேல் சிகிச்சைக்காக தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுவனின் உடலை பிரேதப் பரிசோதனைக்காகத் தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் சிறுவனின் மரணத்திற்கு செங்கோட்டை மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சியமே காரணம் எனக்கூறி இறந்த சிறுவனின் உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் செங்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் இடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனால் போராட்டமானது கைவிடப்பட்டது, சிறுவனின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.
இதையும் படிங்க:ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் நிலைதடுமாறி விழுந்து பரிதாப பலி... பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்!