திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவார பகுதியான பாபநாசம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக குரங்குகள் அட்டகாசம் செய்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டிவருகின்றனர். முன்னதாக, சென்ற வாரம் தங்கம் என்ற மூதாட்டி உள்பட மூன்று பேரை குரங்கு கடித்து தாக்கியது குறிப்பிடத்தக்கது.
மேலும், சிவந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை மொத்தம் 5 பேர் குரங்கு கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, கடந்த 17ஆம் தேதி வனத்துறையினர் அட்டகாசம் செய்துவந்த இரண்டு குரங்குகளை மயக்க ஊசி செலுத்தி பிடித்து, அடர்ந்த காட்டு பகுதிகளுக்கு விட்டனர்.
இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) சிவந்திபுரம் பகுதி வேதக்கோயில் தெருவை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரின் மகன் முத்துராமன்(13). எட்டாம் வகுப்பு படித்து வரும் சிறுவன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது, அவனை வெள்ளை மந்தி குரங்கு ஒன்று தாக்கியுள்ளது.
இதில், சிறுவனின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறுவனை மீட்ட உறவினர்கள், சிகிச்சைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ச்சியாக குரங்குகள் பொதுமக்களை தாக்கி வரும் நிலையில், அப்பகுதியில் சுற்றித் திரியும் குரங்குகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என மக்கள் வனத்துறையினருக்கு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.