மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சவுக்கு சங்கர் (Video Credits - ETV Bharat Tamil Nadu) மதுரை: பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர், தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், மே 4ஆம் தேதி தேனி மாவட்டத்தில், கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே, சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டபோது கஞ்சா வைத்திருந்ததாகக் கூறி சங்கர் உள்ளிட்ட மூவர் மீது தேனி பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அந்த வழக்கில், சவுக்கு சங்கர் மே 7ஆம் தேதி மீண்டும் கைது செய்யப்பட்டார்.
கஞ்சா வைத்திருந்ததாக தேனியில் கைது செய்யப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கரிடம் காவல் துறை விசாரணை நடத்த அனுமதி கோரி போலீசாரும், இந்த வழக்கில் ஜாமீன் கோரி சவுக்கு சங்கரும் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில், இதுதொடர்பான விசாரணைக்காக, கோவையிலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு, மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று (மே 20) சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதனையடுத்து, இந்த வழக்கின் விசாரணை நீதிபதி செங்கமல செல்வன் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, காவல்துறையினர் விசாரணை கோருவதால், மருத்துவப் பரிசோதனை செய்து சான்றிதழ் பெற்றுவர நீதிபதி செங்கமல செல்வன் உத்தரவிட்டார்.
நீதிபதியின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, சவுக்கு சங்கரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பாதுகாப்பாக போலீசார் அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க:ராமர் பாண்டி கொலை வழக்கு; 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததது!