தேனி:பிரபல யுடியூபர் சவுக்கு சங்கர், தமிழ்நாடு காவல்துறை மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து, தேனியில் இருந்த அவரை கைது செய்து நேற்று (மே 4) கோவைக்கு அழைத்து வந்தனர்.
இதனிடையே, காலை 7 மணி அளவில் தாராபுரம் வழியாக சவுக்கு சங்கரை அழைத்துக் கொண்டு வந்த காவல்துறை வாகனம் மீது எதிரே வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காவலர்கள் மற்றும் சவுக்கு சங்கர் என அனைவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டது.
இதனையடுத்து உடனடியாக அனைவரும் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் சவுக்கு சங்கருக்கு உதடு மற்றும் கால் முட்டியில் காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு தாராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் கோவை அழைத்துச் செல்லப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, சவுக்கு சங்கர் மீது 294(b), 509 மற்றும் 353 இந்திய தண்டனைச் சட்டம் (IPC) r/w பிரிவு 4 தமிழ்நாடு பெண் துன்புறுத்தல் தடைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 பிரிவு 67 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கோவை மாநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தேனியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் இருந்த சவுக்கு சங்கர் மற்றும் அவருடைய நண்பர் ராஜரத்தினம், வாகன ஓட்டுநர் ராம் பிரபு ஆகியோர் போதைப் பொருட்கள் வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில், அவர்கள் பயன்படுத்திய காரை தேனி போலீசார் சோதனை செய்துள்ளனர்.
அப்போது, காரில் கஞ்சா இருந்ததாகவும் அதனைப் பறிமுதல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சவுக்கு சங்கர் உடன் அவருடைய நண்பர் ராஜரத்தினம் மற்றும் வாகன ஓட்டுநர் ராம் பிரபு ஆகியோர் மீது தேனி பழனிசெட்டிப்பட்டி போலீசார் காரில் கஞ்சா வைத்திருந்ததாகவும், போலீசாரை தகாத வார்த்தையில் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர்கள் மீது வழக்குப் பதிந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க:'கள்ளக் கடல்' நிகழ்வு..மீனவர்கள், பொதுமக்களுக்கு மயிலாடுதுறை காவல்துறை எச்சரிக்கை!