மதுரை:சங்கரன்கோவில் காவல்துறையினர் தாக்குதலில் வேன் ஓட்டுநர் உயிரிழந்த விவகாரத்தில், உடலை வாங்க மறுத்த அவரது உறவினர்கள், நீதிமன்ற அறிவுறுத்துதலின் பேரில் இன்று (செவ்வாய்கிழமை) உடலை வாங்க சம்மதித்துள்ளனர். இந்நிலையில், உடலை பெறும்போது சாதிய ரீதியான அமைப்புகள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட எவ்வித தலையீடும் இருக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மரணம் அடைந்த ஓட்டுநர் முருகனின் மனைவி மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்குப்புதூரைச் சேர்ந்தவர் வேன் ஓட்டுநர் முருகன். இவர் கடந்த 8 ஆம் தேதி அச்சம்பட்டியில் உள்ள மக்களை ஏற்றிக்கொண்டு கோயிலுக்கு அழைத்துச் சென்றார். அச்சமயம், முப்பிடாதியம்மன் கோயில் அருகே வேன் வந்தபோது, அப்பகுதியில் உள்ள ஆட்டோ மீது வேன் மோதியதாகக் கூறப்படுகிறது.
அப்போது அங்கு போக்குவரத்துப் பணியில் இருந்த காவலர்கள், முருகனை தாக்கியதில் அவர் மயக்கமடைந்துள்ளார். அதையடுத்து, மயக்கமடந்த முருகனை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், முருகன் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.
காவல்துறையினர் அடித்ததால்தான் முருகன் இறந்ததாகக்கூறி, அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து வடக்குப்புதூரில் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், மருத்துவமனையில் மார்ச் 9ஆம் தேதி பிரேத பரிசோதனை நடைபெற்றது. ஆனால், இதுவரை பிரேத பரிசோதனை அறிக்கையை குடும்பத்தினருக்கு காண்பிக்க மறுக்கின்றனர். இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.