சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை தூய்மைப் பணியாளர் தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில், தங்கமாரி என்ற பெண் தனியார் நிறுவனத்தின் மூலம் தூய்மைப் பணியாளராக கடந்த 7 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், தன் கணவர் மூலம் தனக்கு வந்த HIV நோயைக் காரணம் காட்டி, மேலாளர் சுகந்தி மற்றும் மேற்பார்வையாளர் முத்தையா ஆகியோர் தன்னை தரக்குறைவாக நடத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், பொதுவில் இதைக் கூறி தன்னை அவமானப்படுத்துவதாகவும், மனதளவில் காயப்படுத்துவதாகவும் வேதனை தெரிவித்த அவர், இதுகுறித்து சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் பல முறை முறையிட்டும், அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறியுள்ளார். மேலும், இதன் காரணமாக மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அவர், மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனருக்கு மனு அளித்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், மனு அளித்தும் கூட தனக்கு நியாயம் கிடைக்கவில்லை என வேதனை தெரிவிக்கிறார், தங்கமாரி. எனவே தமிழ்நாடு அரசும், மனித உரிமை ஆணையமும் இந்த விஷயத்தில் தலையிட்டு, தனக்கிருக்கும் நோயைக் காரணம் காட்டி மனதளவில் தன்னைக் காயப்படுத்தும் குறிப்பிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், இதை உடனடியாக தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கவனத்தில் எடுத்து, இது போன்ற செயல்கள் இனி வரும் நாட்களில் நடக்கக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அதுமட்டுமன்றி, கொடுக்கப்பட்ட பணியை தான் சரிவர செய்து வரும் நிலையில், தனது குறையை சுட்டிக்காட்டி தன்னுடைய வேலையை மட்டுமல்லாமல், தன்னை தினசரி மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும், இதன் காரணமாக பொதுமக்கள் வரும்போதும், போகும்போதும் தன்னைக் கேவலமாக பார்ப்பதாகவும், சாதி வேறுபாடு பார்ப்பதாகவும் குற்றம் சாட்டிய அவர், இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு பல மனுக்கள் அளித்தும், இதுவரை தன்னுடைய குறைகளைக் கேட்க யாரும் முன் வரவில்லை எனக் கூறினார்.
இதைத் தொடர்ந்து, தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக தனது பிரச்னை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தன்னை வேலை செய்யவிடாமல் மன உளைச்சலுக்கு ஆளாக்கிய அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க:தூத்துக்குடி டூ புதுக்கோட்டை.. ஏடிஎம் மையம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர் கைது! - ATM Robbery In Thoothukudi