சென்னை: தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், கோவை சைபர் கிரைம் போலீசாரால் கடந்த மே 4ஆம் தேதி சவுக்கு என்ற யூடியூப் சேனலின் முதன்மைச் செயல் அதிகாரி சங்கர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அதன் பின்னர், சவுக்கு சங்கர் மீது கஞ்சா வைத்திருந்ததாக தேனி பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கஞ்சா வழக்கு தொடர்பாக தேனி போலீசார், அவதூறு வழக்கு தொடர்பாக சென்னை, திருச்சி போலீசார் சவுக்கு சங்கரை அடுத்தடுத்து கைது செய்தனர்.
தொடர்ந்து, விசாரணைக்கு ஆஜர்படுத்துவதற்காக சவுக்கு சங்கரை, போலீசார் நேற்றைய முன்தினம் சென்னைக்கு அழைத்து வந்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், சவுக்கு சங்கர் மீண்டும் கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “பெருநகர சென்னை வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) அதிகாரியின் புகாரின் பேரில், சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பிரபல யூடியூபர் சங்கர் என்ற சவுக்கு சங்கர் (48) மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு, தற்போது கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான குண்டர் தடுப்புக் காவல் அறிக்கை, கோயம்புத்தூர் சிறையில் உள்ள சவுக்கு சங்கருக்கு இன்று (மே 12) சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு மற்றும் சைபர் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளர் மூலம் சார்வு செய்யப்பட்டது.
இதனையடுத்து, சவுக்கு சங்கருக்கு எதிராக சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ள மேற்படி வழக்கு உட்பட 7 வழக்குகளில், 3 வழக்குகள் விசாரணையிலும், 2 வழக்குகளில் குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டும், மீதமுள்ள 2 வழக்குகள் நீதிமன்ற விசாரணையிலும் உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:சவுக்கு சங்கர் மீது எத்தனை வழக்குகள்? முழு விவரம் இதோ..! - Savukku Shankar Cases List