காஞ்சிபுரம்: திருபெரும்புதூரில், மிகப்பெரிய மின்னணு நிறுவனமான 'சாம்சங்'-இன் (Samsung) தொழிற்சாலை அமைந்துள்ளது. இதில் வேலை செய்யும் தொழிலாளர்கள் செப்டம்பர் 9, 2024 முதல் போராட்டத்தில் (Workers Protest) ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம், வெறும் சம்பள உயர்வுக்கான கோரிக்கையாக மட்டும் இல்லாமல், தொழிலாளர்களின் உரிமைகளுக்கான தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதும் பெரும் குரலாக ஒலிக்கிறது.
இந்த சூழலில், அரசு தரப்பின் பிரதிநிதிகள் பலதரப்பு பேச்சுவார்த்தையை நடத்தி போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால், முக்கியமான, 'சாம்சங் தொழிற்சங்கம்' அங்கீகாரம் அமைக்கும் வரைப் பின்வாங்கமாட்டோம் என தொழிலாளர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த தருணத்தில் போராட்டம் கடந்து வந்த பாதை, மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை என்ன என்பதை விரிவாகப் பார்ப்போம்.
தொழிலாளர்களின் கோரிக்கைகள்:
- வாழ்க்கைக்குத் தேவையான சம்பள உயர்வு: தற்போதைய சம்பளம், அன்றாட வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிக்கப் போதுமானதாக இல்லை என்பதே தொழிலாளர்களின் முக்கிய குற்றச்சாட்டு.
- ஓய்வு என்ற ஒன்று வேண்டுமே: நீண்ட வேலை நேரத்தால், தங்களின் உடல்நலமும், குடும்ப வாழ்க்கையும் பாதிக்கப்படுவதாக தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால் 8 மணிநேர வேலையை அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
- சலுகைகளை அதிகரிக்க வேண்டும்: மருத்துவச் சலுகைகள், ஓய்வூதியத் திட்டங்கள் போன்றவை மேம்படுத்தப்பட வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கை.
- தொழிற்சங்க அங்கீகாரம் வேண்டும்: தொழிலாளர்களின் குரலை ஒன்றுபட்டு எடுத்துச் சொல்ல, தொழிற்சங்கம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
போராட்டக் களம் அன்று முதல் இன்றுவரை...
செப்டம்பர் 9, 2024: ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சாம்சங் தொழிற்சாலை முன் கூடி, போராட்டத்தைத் தொடங்கினர்.
செப்டம்பர் 15, 2024: போராட்டத்தில் பங்கேற்கும் தொழிலாளர்களை நிறுவனம் மிரட்டுவதாகவும், வேலைக்குத் திரும்ப வற்புறுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. தொழிலாளர்கள் எனினும் மனம் தளராமல் போராட்டத்தைத் தொடங்கினர்.
செப்டமப்ர் 16, 2024:தங்களின் வேலைநிறுத்த போராட்டத்தில் மாவட்ட ஆட்சியரை தலையிட கோரி பேரணியில் ஈடுபட முயன்ற சாம்சங் தொழிற்சாலை ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்தனர். (மேலும் படிக்க)
செப்டம்பர் 23, 2024: சில தொழிலாளர்களுக்கு பரிசுகள் அறிவித்து, போராட்டத்திலிருந்து விலக சாம்சங் முயற்சிகள் மேற்கொண்டது. வேலைக்கு வராதவர்களுக்கு போனஸ் பிடித்தம், சம்பள பிடித்தம் செய்யப்படும் என சாம்சங் எச்சரித்தது. இதனையடுத்து சாம்சங் அளித்த சன்மானங்களைப் பெற்று சில ஊழியர்கள் வேலைக்குத் திரும்பினர். ஆனாலும், பெரும்பாலான தொழிலாளர்கள் போராட்டக் களத்திலேயே உறுதியாக நின்றனர். (மேலும் படிக்க)
அக்டோபர் 2, 2024: தமிழ்நாடு அரசின் தலையீட்டால், சாம்சங் நிர்வாகத்தினருக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது. நல்ல செய்தி வரும் எனத் தொழிலாளர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.
அக்டோபர் 5, 2024: சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்துக்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், சி.வி.கணேசன், டி.ஆர்.பி.ராஜா ஆகியோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். (மேலும் படிக்க)