சேலம்: கோயில் விவகார பேச்சுவார்த்தையில் உங்கள் வீட்டில் ஆம்பளைங்களே இல்லையா? என பெண்களிடம் பாமக எம்எல்ஏ அருள் பேசியது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவருக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே முத்துநாயக்கன்பட்டியில் அங்காளம்மன், பெரியாண்டிச்சி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே பிரச்னை எழுந்ததாக கூறப்படுகிறது. இதனால், ஓமலூர் தாசில்தார் இரு தரப்பையும் அழைத்து, பல கட்ட அமைதி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனால், அதில் உடன்பாடு ஏற்படாததால் கோயில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.
உங்கள் வீட்டில் ஆம்பளைங்க எவரும் இல்லையா?
இந்நிலையில், பூட்டப்பட்ட கோயிலை திறப்பதற்கான பேச்சுவார்த்தை நேற்று (டிசம்பர் 18) புதன்கிழமை நடைபெற்றுள்ளது. இதில், இரு தரப்பின் அழைப்பை ஏற்று, சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளார். இதில், ஒரு தரப்பில் ஆண்களும், மற்றொரு தரப்பில் பெண்கள் மட்டுமே வருகை புரிந்துள்ளனர்.
கூட்டத்தில் பெண்களிடம் பேசிய பாமக எம்எல்ஏ அருள் (ETV Bharat Tamil Nadu) அப்போது பேசிய எம்எல்ஏ அருள், இரு தரப்பும் சமாதானமாகி கோயில் திறக்க ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதில், ஒரு தரப்பில் பெண்கள் மட்டுமே பேசியுள்ளனர். இந்த நிலையில், எம்எல்ஏ அருள் குறுக்கிட்டு, "உங்கள் தரப்பில் ஆம்பளைங்க எவரும் இல்லையா? முக்கியஸ்தர்கள், ஆண்கள் இல்லாமல் எப்படி உறுதியான முடிவை எடுப்பது. உங்கள் தரப்பு ஆண்களை வரச்சொல்லுங்கள்," என்று பேசியது வெளியான வீடியோவில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க:'நானும் கிறிஸ்தவன் தான்' - கிறிஸ்துமஸ் விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
அவரது பேச்சுக்கு பெண்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவரை முற்றுகையிட்டுள்ளனர். எங்களை பார்த்து எப்படி ஆம்பளைங்களே இல்லையா? என்று கேட்கலாம் என்று கூறியுள்ளனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து, எம்.எல்.ஏ அருள், "இந்த கோயில் அரசுக்கு சொந்தமான இடத்தில் இருக்கிறது. அதனால், கோயிலை அரசு கட்டுப்பாட்டில் எடுத்து அனைத்து சமுதாய மக்களும் வந்து வணங்கி செல்ல அனுமதிக்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நீங்கள் ஒற்றுமையாக இல்லாவிட்டால் கோயிலை இரு தரப்பும் இழக்க நேரிடும். ஒற்றுமையுடன் இருந்து கோயிலை திறந்து பூஜை செய்ய இரு தரப்பும் ஒத்துழைக்க வேண்டும்," என்று கேட்டுக்கொண்டார். ஆனால், இதற்கு யாரும் ஒத்துழைப்பு அளிக்காமல் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.
மேலும், இது குறித்த வீடியோவில், எம்எல்ஏ அருளை பார்த்து, பெண்கள் கையெடுத்துக் கும்பிட்டு அழும் காட்சிகளும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாமக எம்எல்ஏ அருளின் இத்தைகைய செயல்பாட்டுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பாமக எம்எல்ஏ விளக்கம்:
இந்த நிலையில், இது குறித்து பாமக எம்எல்ஏ அருள் வீடியோ வாயிலாக விளக்கம் அளித்துள்ளார். அதில், "கூட்டத்தில் பெண்கள் கோயிலை திறக்க வேண்டும் என அழுதபடி எனது காலை பிடித்து கேட்டனர். இது எனக்கு வேதனையையும், ஆதங்கத்தையும் ஏற்படுத்தியது. கோயிலை திறக்க வேண்டும் என்பது எனது ஆசையும். ஆனால், அரசு கோயிலை பூட்டியுள்ளது. இரு தரப்பினரும் ஒற்றுமையாக இருந்தால் தான் கோயிலை திறக்க முடியும்.
நான் எம்எல்ஏ என்ற அடிப்படையில் சட்டத்தை கையில் எடுத்து கோயிலை திறக்கமுடியாது எனப் பேசினேன். அவர்கள் என்னைப் பேசவே விடாமல் கோயிலை திறக்கச் சொல்லி கேட்டனர். பொதுவான இடத்தில் உள்ள கோயிலில் நாங்களும் வழிபட உரிமை வேண்டும் என மற்றொரு பிரிவினர் கூறினர். அதன் பிறகு தான் பெண்களிடம், உங்கள் தரப்பில் ஆண்களை வரச் சொல்லுங்கள் என்று கூறினேன்," என்று தெரிவித்துள்ளார்.