திருப்பூர்: திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நிகழ்வு தினம்தோறும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று பாஜக மாவட்ட செயலாளர் கார்த்திக் ஏற்பாட்டில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு, சாமி தரிசனம் மேற்கொண்டார்.
தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியதாவது, "திருப்பூரில் உள்ள ஐயப்பன் கோயிலில் வழிபாடு நடத்துவது மகிழ்ச்சி அளிக்கின்றது." என்றார்.
பின்னர் நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியது சர்ச்சை ஏற்படுத்தியது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர்,"மகாத்மா காந்தி மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கு பிறகு அனைத்து தரப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர் என்றால் அது அம்பேத்கர்தான்.
அரசியல் சாசனத்தை இயற்றிய அம்பேத்கரின் புகழை குறைக்கின்ற முயற்சியில் யார் ஈடுபட்டாலும் அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.அம்பேத்கரின் புகழை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும் . ஒரே நாடு ஒரே தேர்தல் முறை மக்கள் நலனிலும், பொருளாதார முன்னேற்றத்திலும் அக்கறை செலுத்தும். ஆனால் இதற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு இருக்கிறது.
இதையும் படிங்க: ஒடுக்கப்பட்ட மக்களை துணை முதல்வர் ஆக்குங்கள்; கூச்சலிட்டு பலனில்லை - வானதி சீனிவாசன்!
அடிக்கடி குழந்தை பெறுவது தாயின் உடல் நலத்திற்கு கேடு என்பது போல, அடிக்கடி தேர்தல் என்பது பொருளாதார முன்னேற்றத்திற்கான கேடு என்பதை நாம் உணர வேண்டும்.
சீமான் நேற்றைய தினம்கூட பாஷாவிற்கு நினைவஞ்சலி செலுத்தினார். சீமானிடம் என்ன எதிர்பார்ப்பது? இந்த சமூகத்தில் உள்ள அத்தனை கட்டுப்பாடுகளும் சீர்குலைய வேண்டும் என்று நினைப்பவர் அவர். பாலஸ்தீனத்தில் நடைபெறும் தாக்குதலுக்கு அனைத்து தரப்பை சேர்ந்தவர்களும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்." என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின்போது பாஜக நிர்வாகிகள், ஐயப்பன் கோயில் டிரஸ்ட் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.