சென்னை:சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்ய துணை வேந்தருக்கு உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கார்த்திக் கடிதம் எழுதியுள்ளார். அவர் அனுப்பி உள்ள கடிதத்தில், “சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தின் அலுவலர்கள் மீது பல்கலைக்கழகத்தின் பணியாளர் நியமனம், பொருட்கள் கொள்முதல் ஆகியவற்றில் முறைகேடுகள் நடைபெற்றதாக பெறப்பட்ட புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்த உயர் கல்வித் துறையின் அரசு கூடுதல் செயலாளராக பணியாற்றிய சு.பழனிசாமி மற்றும் உயர் கல்வித்துறையின் இணைச் செயலாளர் ம.இளங்கோ ஹென்றி தாஸ் (தற்போது அரசு கூடுதல் செயலாளர்) ஆகியோர் அடங்கிய குழுவினை அமைத்தது.
அந்த குழு தனது விசாரணையை மேற்கொண்டு, அறிக்கையினை அரசிடம் சமர்ப்பித்துள்ளது. விசாரணை அறிக்கையில் பேராசிரியர், கணினி அறிவியல் துறைத் தலைவர் மற்றும் பதிவாளர் கு.தங்கவேல் மீது அளிக்கப்பட்டிருந்த புகார்களை விசாரணை செய்து, தனது முடிவினை சமர்ப்பித்துள்ளது. கணினி அறிவியல் துறைத் தலைவர் கு.தங்கவேல், பணி நியமனம் உள்ளாட்சி தணிக்கைத் துறையின் தடையில் இடம் பெற்றது.
அதனை நீக்கியது சட்டப்படி தவறானது. தங்கவேல் பதிவாளர் பொறுப்பில் இருக்கும்போது, தன்னுடைய துறைக்குத் தேவையான அனைத்து அறைகலன்களும் ஒரே நிறுவனத்தில் கொள்முதல் செய்தது மற்றும் அவ்வாறு வாங்கிய அறைகலன்களுக்கு ஒரே ரசீதுக்கு இரண்டு முறை பணம் பெற்றது குறித்து 2019 -2020ஆம் நிதியாண்டில் உள்ளாட்சி நிதித் தணிக்கையில் தடை எழுப்பப்பட்டது.
கணினி அறிவியல் துறைத் தலைவரும் மற்றும் பல்கலைக்கழக கணினி மைய இயக்குநரான தங்கவேல், கணிப்பொறி கொள்முதல் செய்துள்ளதில் பெரும் ஊழல் மற்றும் உயர் கட்டமைப்பு (அதிக திறன்) கொண்ட கணிப்பொறிகளின் விவரங்களைக் குறிப்பிட்டு விலைப்புள்ளிகள் கோரப்பட்டு குறைந்த திறனுள்ள கணிப்பொறிகளையே கொள்முதல் செய்துள்ளதில் பெரும் ஊழல் செய்ததால், கடந்த ஆண்டுகளில் பல மென்பொருட்களை, கணினிகளை முறைகேடாக தமிழ்நாடு அரசின் விதிகளை மீறி கொள்முதல் செய்ததில் நிதி இழப்பு மற்றும் ஊழல் செய்துள்ளார்.
கணினி அறிவியல் துறைக்கு ஒதுக்கிய நிதியை விதிகளை மீறி தவறாக பயன்படுத்தியது மற்றும் தேவைக்கு அதிகமாக கணினிகள் கொள்முதல் செய்ததில் நிதி முறைகேடுகள் M/s MAG Edu Solutions (India) Private Limited நிறுவனத்திடம் சாப்ட்வேர் வாங்கப்பட்டு, இன்று வரை செயல்படாமல் உள்ளது. DDU-GKY திட்ட உதவியுடன் ஆதிதிராவிட இளைஞர்களுக்கு நடத்தப்படும் ஸ்கில் கோர்ஸ்களில் பெறும் கொள்முதல்கள், விதிமீறல்கள் முறைகேடானது.