கடலூர்:தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தாதாகக் கூறி, தமிழக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது தொடர்பாக, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், "அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக, திமுக மீது போதைப்பொருள் குற்றச்சாட்டை எடப்பாடி பழனிசாமி வைத்துள்ளார். தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில், ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் என்ன என்பதை அவர் தெளிவுபடுத்தி இருக்க வேண்டும்.
இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கின்றது. இதனை அவரால் தாங்கிக் கொள்ள முடியாமல்தான் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில்தான் ஏதோ போதை அதிகமாக இருப்பதாகக் கூறுகிறார்.
ஒரு விரலில் சுட்டிக்காட்டும்போது, மூன்று விரல் தன்னை சுட்டிக்காட்டும் என்பதை மறந்து விடக்கூடாது. அதானிக்குச் சொந்தமான துறைமுகத்தில் இருந்துதான் இந்தியாவினுடைய மொத்த போதைப்பொருள் கடத்தலும் நடைபெறுகிறது. இந்தியா முழுவதும் போதைப்பொருள் விற்பனை செய்பவர்களே பாஜகவினர்தான் என்பதை என்னால் ஆதாரத்துடன் கூற முடியும்" என்று தெரிவித்தார்.