திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் அருகே உள்ள தென்திருப்புவனத்தைச் சேர்ந்தவர் பேச்சித்துரை. இவரது நண்பரான கல்லிடைகுறிச்சியைச் சேர்ந்த சந்துருவும் இவரும், கடந்த 7ஆம் தேதி மது மற்றும் கஞ்சா போதையில் தொழிலாளி ஒருவரை கொலை செய்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து விசாரிக்கச் சென்ற போலீசாரை அரிவாளால் வெட்டியுள்ளனர். இது தொடர்பான வழக்கில் பேச்சித்துரை என்பவரை போலீசார் சுட்டுப் பிடித்தனர். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் (மார்ச் 10) நேற்றிரவு பேச்சித்துரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பின்னணி:திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே வெள்ளான்குளியில் சாலை பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு விருதுநகர் மாவட்டம் செட்டிகுளத்தைச் சேர்ந்த கருப்பசாமி (42)என்பவர் பணி செய்து வந்துள்ளார்.
அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த பேச்சித்துரை மற்றும் சந்துரு ஆகிய இருவரும் அரிவாளால் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் அரசு பேருந்து கண்ணாடியைச் சேதப்படுத்தி, அங்கு பணியில் ஈடுபட்டு இருந்த கருப்பசாமியிடம் தகராறு செய்து அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் அங்கு இருந்த மற்றொரு நபரையும் வெட்டி காயப்படுத்திவிட்டு தாமிரபரணி ஆற்றுப் பகுதிக்குச் சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், ஆற்றின் கரையோர பகுதியில் சென்று இருவரையும் விரட்டிப் பிடிக்க முயன்றுள்ளனர்.
அப்போது செந்தில் என்ற போலீசாரை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்தும் போலீசார் செந்தில் குமாரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
இதற்கிடையில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட இருவரும் திருப்புடைமருதூர் அருகே தோட்டத்திற்குள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்குச் சென்ற போலீசார் பேச்சித்துரை என்பவரைக் காலில் சுட்டுப் பிடித்துள்ளனர்.
இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தின் போது தப்பியோடிய கல்லிடைகுறிச்சியைச் சேர்ந்த சந்துரு என்பவரை அன்றிரவே போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் நெல்லை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த பேச்சித்துரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையும் படிங்க:பணி நேரத்தில் மது போதையிலிருந்த காவலர்.. துறை ரீதியிலான விசாரணைக்கு உத்தரவு!