சென்னை :சென்னை பெரம்பூர் பகுதியில் கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில முன்னாள் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அடுத்தடுத்து பல்வேறு நபர்கள், ரவுடிகளை கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இதுவரை 28 நபர்களை செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அதில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு டெல்லியில் வைத்து ரவுடி புதூர் அப்பு என்பவரை போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். பின்னர், புதூர் அப்பு நாட்டு வெடிகுண்டு தயார் செய்து சப்ளை செய்த காரணத்திற்காக கைது செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க :ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; 28வது நபர் டெல்லியில் கைது!
இந்நிலையில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில், இவர்கள் தன்னிடம் நாட்டு வெடிகுண்டு வாங்கிய போது அதை ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டமிட்டு தான் வாங்கியது தனக்கு தெரியாது.
தனக்கும், சம்போ செந்தில் ரவுடிக்கும் நேரடி தொடர்பு எதுவும் இல்லை. நான் சிறையில் இருந்த பொழுது அவருடைய கூட்டாளிகளுடன் தனக்கு தொடர்பு ஏற்பட்டு அவரிடம் செல்போனில் ஒருமுறை பேசியதாக தெரிவித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை செய்வதற்கு முன்பு தன்னிடம் வந்து நாட்டு வெடிகுண்டு கேட்டதாகவும், அப்போது கேகே நகர் பகுதியில் தனது நண்பர் குடோனில் பதுக்கி வைத்திருந்த 6 நாட்டு வெடிகுண்டுகளை வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் மற்றும் ஹரிகரன் ஆகியோர் மூலமாக வழக்கறிஞர் அருளுக்கு கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய தான் திட்டமிட்டு நாட்டு வெடிகுண்டுகள் வாங்குகிறோம் என தன்னிடம் அவர்கள் கூறவில்லை எனவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.