சென்னை: கடல் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவது, இன்றைய நவீன காலகட்டத்தில், உலக அளவில் தீவிரமான பிரச்சனையாக இருந்து வருகிறது. பசுமை வாயுக்களின் தொடர் வெளியேற்றத்தால், புவி வெப்பநிலை அதிகரித்து, அதன் விளைவாக கடல் நீரின் வெப்பமும் அதிகரித்து வருகிறது. கடல் வெப்பநிலை அதிகரித்து வருவதன் காரணமாக பனிப்பாறைகள் உருகி வழிந்து, இறுதியில் கடல் நீர்மட்டம் உயர்வதில் கொண்டு போய் விட்டுள்ளது.
புவி வெப்பமயமாதலின் விளைவாக, வரும் 2100 இல் உலக அளவில் கடல் நீர்மட்டம் 1.3 மீட்டர் முதல் 1.6 மீட்டர் அளவுவரை உயரக்கூடும் என்று பருவநிலை மாற்றத்துக்கான சர்வதேச அமைப்பு (IPCC) மதி்ப்பிட்டுள்ளது. கடல் நீர்மட்டம் அதிகரிப்பது சர்வதேச அளவில் கடலோரம் அமைந்துள்ள நகரங்களுக்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்றும் IPCC ஏற்கெனவே எச்சரித்துள்ளது.
இந்நிலையில் இயற்கை துறைமுகங்கள், கலாசார மையங்கள், மத நினைவுச் சின்னங்கள் என பண்டைய காலந்தொட்டே நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றிவரும் சென்னை உள்ளிட்ட கடலோர மாநகரங்கள், கடல் நீர்மட்டம் அதிகரிக்கப்பால் சந்திக்கவுள்ள எதிர்விளைவுகள் குறித்து ஆய்வறிக்கை ஒன்று அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது.
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கைகளுக்கான ஆய்வு மையம் (CSTEP) சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதில், 'புவி வெப்பமயமாதலின் விளைவாக, சென்னையில் கடல் நீர்மட்டம் கடந்த 1987 முதல் 2016 ஆம் ஆண்டு வரை, மொத்தம் 0.679 செ.மீ. அளவுக்கு அதிகரித்துள்ளது. இதே நிலை நீடித்தால், வரும் 2040 ஆம் ஆண்டில், சென்னையில் கடல் நீர்மட்டம் 17.4 சென்டிமீட்டர் அளவுக்கு உயரம் அபாயம் உள்ளது. இதன் விளைவாக, 86.6 சதுர கிலோமீட்டர் அளவிலான சென்னையின் நிலப்பரப்பு காணாமல் போகக்கூடும். அதாவது சென்னை மாநகரின் மொத்த நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 7.29 சதவீதம் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது' என்று அந்த ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.