தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேனியில் தவறான சிகிச்சையால் நோயாளி உயிரிழந்தாக குற்றச்சாட்டு..! உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு! - அரசு மருத்துவர் கிளினிக்

Theni Patient Death: பெரியகுளம் அருகே அரசு மருத்துவர் நடத்தும் கிளினிக்கில் சிகிச்சை பெற வந்த நோயாளிக்கு தவறான சிகிச்சை அளித்த காரணத்தால் நோயாளி உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Relatives alleged patient died due to wrong treatment in Theni and involved in a road blockade
தேனியில் தவறான சிகிச்சையால் நோயாளி உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் சாலைமறியல்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 22, 2024, 10:31 AM IST

தேனியில் தவறான சிகிச்சையால் நோயாளி உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் சாலைமறியல்

தேனி: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள தென்கரை பேரூராட்சி பகுதிக்குட்பட்ட தொ.கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் சேவுக பாண்டி (வயது 45). இவர் உடல் உபாதை ஏற்பட்டதன் காரணமாக அப்பகுதியில் உள்ள தனியார் கிளினிக்கிற்கு சென்றுள்ளார்.

அந்த தனியார் கிளினிக் பெரியகுளம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ராம்குமாரின் கிளினிக் ஆகும். இந்நிலையில், நேற்று (பிப்.21) இரவு 9 மணி அளவில் கிளினிக்கிற்கு சிகிச்சைக்காகச் சென்ற சேவுக பாண்டிக்கு மருத்துவர் ராம்குமார் சிகிச்சை அளித்ததாகக் கூறப்படுகிறது.

சிகிச்சையின் போது ஊசி போட்டதாகவும், ஊசி போட்ட சிறிது நேரத்தில் நோயாளி சிகிச்சைப் பலனின்றி இறந்ததால், தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாகக் கூறி அவரது உறவினர்கள் தேனி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அங்கு வந்த பெரியகுளம், தென்கரை காவல்துறையினர் மற்றும் தேனி மாவட்ட உதவி காவல்துறை கண்காணிப்பாளர் விவேகானந்தன், போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் சேவுக பாண்டிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ராம்குமாரை விசாரணைக்காகத் தென்கரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அதன்பின் உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதனையடுத்து சிகிச்சைப் பலனின்றி இறந்த சேவுக பாண்டியின் உடலைக் கைபற்றி உடற்கூராய்விற்காக பெரியகுளம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரசு மருத்துவமனை மருத்துவர் தனியாக நடத்தி வரும் கிளினிக்கில் சிகிச்சைக்காகச் சென்ற நபர் உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:கும்பகோணம் மாசி மகம் உற்சவம்.. அபிமுகேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண வைபவம் கோலாகலம்!

ABOUT THE AUTHOR

...view details