சென்னை:இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு விழாவையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகசங்கள் நடைபெற்றன. இதனை பார்க்க வருகை தந்த 5 நபர்கள் உயிரிழந்தனர். இவர்கள் வெயிலின் தாக்கம் காரணமாக உயிரிழந்ததாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் அரசு எந்தப் போதிய அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை. ஆனால் அமைச்சர் முன்னுக்கு பின் முரணான விஷயங்களை கூறி பேட்டி அளித்துள்ளார் என உயிரிழந்த நபரின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில், விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வருகை தந்து உயிரிழந்த ஜான்(56) என்பவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
அவரது உடலை முறைப்படி பெற்றுக்கொள்ள அவரது மகன் நரேந்திரன், உறவினர் சரத் மற்றும் நண்பர் ஜெஸ்டின் ஆகியோர் வந்திருந்தனர். பின்னர் ஈடிவி பாரத் செய்தி ஊடகத்திற்கு அவர்கள் அளித்த பேட்டியில் கூறியதாவது, "குடும்பத்துடன் விமான சாகச நிகழ்ச்சி பார்க்க வேண்டும் என வருகை புரிந்தோம். இதில் போதிய குடிநீர் வசதி இல்லாமல் வெயிலில் நின்றதால் எனது தந்தை உயிரிழந்து விட்டார். எங்கள் குடும்பத்திற்கு அனைத்துமாய் இருந்தவர் என் அப்பா. தற்போது தாத்தா எங்கே? என்று பேர குழந்தைகளும் கேட்கின்றனர். நாங்கள் என்ன பதில் சொல்வோம். நேற்று இறந்தவரின் உடலை இப்போது வரை பிரேத பரிசோதனை செய்யவில்லை. அவரது உடலை பிளாட்பாரத்தில் படுக்க வைத்திருந்தனர்" என உயிரிழந்த ஜான் மகன் நரேந்திரன் தெரிவித்தார்.
இதையும் படிங்க:விமான சாகச நிகழ்ச்சி: ஐந்து பேர் இறப்புக்கு என்ன காரணம்? - அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கம்!