மதுரை: மதுரை அழகர் கோயில் சாலையில் உள்ள தனியார் உணவு விடுதியில் பெட்னா அமைப்பு சார்பாக தொழில் முனைவோர்களுக்கான மாநாடு நேற்று (ஜன.18) நடைபெற்றது. இந்த நிகழ்வில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு துணை முதலமைச்சர் வருவது தவறு கிடையாது. அவரது மகனையும் அழைத்து வந்தது கூட தவறு கிடையாது. ஆனால், மகனை முதல் இருக்கையில் அமர வைத்ததுதான் தவறு.
ஜல்லிக்கட்டு ஆட்சியர் இருக்கை விவகாரம்:
அதைவிட மாபெரும் தவறு துணை முதலமைச்சர் மகன் இன்பநிதியின் நண்பர்களை முதல் இருக்கைக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக அமைச்சர் மூர்த்தி செய்தது தவறு. மாவட்ட ஆட்சியர் என்னை வற்புறுத்தவில்லை என்று கூறுகிறார். அப்புறம் எதற்கு ஒரு இருக்கையை மாவட்ட ஆட்சியர் விட்டுக் கொடுத்தார். ஆட்சியர் அமர்ந்திருந்த இருக்கையில் இன்பநிதியின் நண்பர் அமர்ந்திருக்கிறார்.
இதையும் படிங்க: "தமிழகர்களிடம் ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும்" - சட்டத்துறை மாநாட்டில் தீர்மானம்!
நியாயமாக பார்த்தால் மாவட்ட ஆட்சியர், அமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் நடுவில் தான் அமர்ந்திருக்க வேண்டும். அந்த இருக்கையை விட்டுக் கொடுத்தது மாபெரும் தவறு. மாவட்ட ஆட்சியரை ஒரு ஓரத்தில் தள்ளிவிட்டார்கள். இப்படி இருந்தால் சாமானிய மனிதருக்கு இந்த ஆட்சியரின் மீது எப்படி நம்பிக்கை வரும்? மாவட்ட ஆட்சியர் நடந்து கொண்ட விதம் ஏற்புடையது அல்ல. அமைச்சர் மூர்த்தியின் இருக்கையில் உதயநிதியின் மகனை அமர சொல்லி இருக்க வேண்டும் என்றார்.
விஜய்யை அழைக்கும் அரசியல் கட்சிகள்:
செல்வபெருந்தகைக்கு நான் சொல்வது, நடிகர் விஜய் மீது வைக்கும் நம்பிக்கையை 10 சதவீதம் ராகுல் காந்தி மீது வைக்க வேண்டும். இதை நான் அறிவுரையாக சொல்கிறேன். இளைஞர்கள் சேர முடியாத கட்சிகள் விஜயை அழைக்கிறார்கள். அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, விஜய்யை அழைத்தாரா? இல்லையா? தற்போது அதே வேலையை செல்வப்பெருந்தகை செய்கிறார். பாஜகவிற்கு யாரையும் அழைக்க வேண்டிய அவசியமில்லை, இளைஞர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். நாங்கள் யாரையும் அழைக்க வேண்டிய அவசியம் இல்லை.
“திருவள்ளுவர் ஆரிய கைக்கூலியாம்”:
திமுக பிறக்கும் முன்பு 1949-க்கும் முன்பு, வள்ளுவர் தனது திருக்குறளில் ஆன்மீக கருத்துக்களை சொல்லியுள்ளார். பெரியார் வள்ளுவன் ஆரிய கைக்கூலி என்றார். அப்புறம் வள்ளுவருக்கு காவிக்கொடி பூசினால் உங்களுக்கு என்ன? தமிழகத்திற்கு வலுவான தலைவர்கள் வரவேண்டும். திமுக தமிழ்நாட்டில் இருப்பதை சாபக்கேடாக பார்க்கிறேன்” என்றார்.
திருப்பரங்குன்றம் இஸ்லாமியர்கள் விவகாரம்:
திருப்பரங்குன்றம் மலைமீது ஆடு, கோழிகளை பலியிட இஸ்லாமியர்கள் முற்பட்டது குறித்த பதில் அளித்த அண்ணாமலை, “சரித்திரத்தை பாருங்கள் அந்த மலை எப்போது இருந்து அறுபடை வீடுகளில் முக்கிய வீடாக உள்ளது என்று. திருப்பரங்குன்றம் மலைக்கு சிக்கந்தர் மலை என பெயர் வைத்து இவர்கள் ஆடுகளை தூக்கிக் கொண்டு செல்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.