சென்னை:சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பஞ்சுமிட்டாயில் ரோடமைன் பி (Rhodamine B) எனும் ரசாயனம் கலந்திருப்பதாகவும், இந்த ரசாயனம் கலந்த பஞ்சுமிட்டாய்களைத் தொடர்ந்து அதிகளவில் உட்கொள்ளும் போது புற்றுநோய் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் வண்ணம் சேர்க்கப்பட்ட பஞ்சுமிட்டாய்களுக்குத் தடை விதிப்பதாகத் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று(பிப்.17) அறிக்கை வெளியிட்டார்.
கிராமங்களில் சிறிய கோயில் திருவிழா முதல் நகரங்களில் வீதிகள் மட்டுமல்லாது பெரிய பெரிய கடைகள், திருமண நிகழ்ச்சிகள் மற்றும் பெரிய வணிக வளாகங்கள் என பல்வேறு இடங்களில் கண் கவரும் வண்ணத்தில் விற்பனை செய்யப்படுவது தான் இந்த பஞ்சு மிட்டாய். குழந்தைகளை மட்டுமல்லாது பெரியவர்கள் வரை எளிமையாக ஈர்க்கக்கூடியதும், நாவில் வைத்த உடன் இனிப்பு சுவையைத் தூண்டும் ஒரு தின்பண்டமே இந்த பஞ்சு மிட்டாய். ஆரம்ப காலகட்டத்தில் வெறும் சர்க்கரையை மட்டும் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டு வந்த பஞ்சு மிட்டாய் நாளடைவில் பல வண்ணங்களில் விற்பனையாகத் தொடங்கியது.
குறிப்பாகக் குழந்தைகள் குறிவைக்கப்பட்டுப் பல வண்ணங்களில் இந்த பஞ்சு மிட்டாய்கள் விற்பனையாகத் தொடங்கியது. வெள்ளை நிறத்திலிருந்த பஞ்சுமிட்டாய் செயற்கை வண்ணம் சேர்க்கப்பட்டு ஆரஞ்சு, பச்சை, மஞ்சள், வெளிர் நிறம், இளஞ்சிவப்பு, நீளம் எனப் பல வண்ணங்களில் விற்பனையாகி வருகிறது.
சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் இந்த செயற்கை வண்ணம் சேர்க்கப்பட்டுத் தயாரிக்கும் பஞ்சு மிட்டாய்களால் மனித உடலுக்குப் புற்றுநோய் ஏற்படக்கூடிய அபாயம் வரை உள்ளது எனத் தகவல் பரவியது. இதையடுத்து புதுச்சேரியில் வண்ணம் சேர்க்கப்பட்டு விற்பனையான பஞ்சு மிட்டாய்-யை ஆய்வுக்கு உட்படுத்தியதன் அடிப்படையில், அதில் ரோமடைன் பி(Rhodamine B) என்னும் ரசாயனப் பொருள் கலந்து தயாரிக்கப்படுவதால் மனித உடலுக்குப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து புதுச்சேரியில் பஞ்சுமிட்டாய் விற்பனைக்குத் தடை என்ற அறிவிப்பினை வெளியிட்டது புதுச்சேரி அரசு.
இதனையடுத்து, தமிழகத்திலும் பஞ்சு மிட்டாய்கள் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் பகுப்பாய்வு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதில் பஞ்சுமிட்டாயில் ரோமடைன் பி (Rhodamine B) என்னும் ரசாயனப் பொருள் கலந்துள்ளது கண்டறியப்பட்டது இதனையடுத்து தமிழகத்திலும் செயற்கை வண்ணம் சேர்க்கப்பட்டுத் தயாரித்து விற்பனை செய்யப்படும் பஞ்சுமிட்டாய்களுக்குத் தடை எனத் தமிழக சுகாதாரத்துறை இன்று (பிப்.17) அறிவிப்பினை வெளியிட்டது.