விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "தமிழகத்தில் திமுக அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவும், மதுவிலக்கு அமல்படுத்தவும் மறுக்கும் திமுக அரசு, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகளால் மக்கள் கொந்தளிப்பில் உள்ளதை அறிந்து அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளது.
பாமக கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் பெண்களை அடைத்து வைப்பது. உள்ளாட்சி பிரதிநிதிகளை மிரட்டுவது என திமுக அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த அத்துமீறல்களை முறியடித்து விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக வேட்பாளர் வெற்றிப் பெறுவார்.
அதிமுகவும், பாமகவும் தான் திமுகவுக்கு எதிரி. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவும் திமுகவை தீய சக்தி என்று அழைத்தனர். அந்த தீய சக்தியை வீழ்த்தும் வலிமை பாமகவிற்கு உண்டு.
சாதிவாரி கணக்கெடுப்பை இல்லாத காரணங்களை காட்டி, தட்டி கழிக்கும் அரசு பதவி விலகவேண்டும். விழுப்புரம் அருகே தி குமாரமங்கலத்தில் விற்கப்பட்ட கள்ளச்சாராயம் குடித்து ஜெயராமன் இறந்துள்ளார். மேலும், இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் இருந்து முருகன் வாங்கி வந்த கள்ளச்சாராயம் என தெரியவந்துள்ளது.
இதிலிருந்து கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்க தமிழக அரசு தவறியதால் முதல்வர் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். சாதிவாரி இடஒதுக்கீட்டால் தான் பலர் கல்வி கற்றுள்ளனர் என்று திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது.