தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"விக்கிரவாண்டி வெற்றியை பரிசாக தாருங்கள்"... பாமக தொண்டர்களுக்கு ராமதாஸ் வேண்டுகோள்! - Ramadoss pmk

pmk 36th Inaugural Ceremony: பாமகவின் 36 ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலின் வெற்றியை பரிசாக வழங்குங்கள் என்று தொண்டர்களுக்கு ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

ராமதாஸ் (கோப்புப்படம்)
ராமதாஸ் (கோப்புப்படம்) (Credit - Etv Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 2, 2024, 12:21 PM IST

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டு 35 ஆண்டுகள் நிறைவடைய இருப்பதால் அதற்கு பரிசாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றியை பெற்று தருமாறு தொண்டர்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

36ஆம் ஆண்டில் பாமக:ராமதாஸ் எழுதியுள்ள மடலில் கூறியிருப்பதாவது; ''என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே! தமிழ்நாட்டில் சமூகநீதியின் அடையாளமாகவும், அனைத்துத் தரப்பு மக்களின் பாதுகாவலனாகவும் திகழும் பாட்டாளி மக்கள் கட்சி, வரும் ஜூலை 16 ஆம் நாள் 35 ஆண்டுகளை நிறைவு செய்து, 36ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த தருணத்தில் உலகமெங்கும் வாழும் பாட்டாளி சொந்தங்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டு 35 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன என்ற உண்மையை சொல்லி முடிக்கும் போதே, இந்த 35 ஆண்டுகளில் ஓர் அரசியல் கட்சியாக என்னென்ன சாதித்தோம்? என்ற வினாவும் எழும். அது இயற்கை தான். அந்த வினாவுக்கு விடையளிக்கும்போது, 35 ஆண்டுகள் ஆகியும் இன்னும் ஆட்சிப் பொறுப்பை அடைய முடியவில்லை என்ற நமது இயலாமையை ஒப்புக்கொள்ளும்போது மனம் வலிக்கிறது. எதனால் அது சாத்தியமாகவில்லை என்ற வினா எனது மனதில் நிறைகிறது.

அதேநேரத்தில் தமிழ்நாட்டு மக்களுக்காகவும், சமூகநீதிக்காகவும் நாம் ஆற்றிய பணிகள் தான் நமது மனதிற்கு நிறைவைத் தருகின்றன. ஆட்சியில் இருந்த, ஆட்சியில் இருக்கும் கட்சிகளால்கூட சாத்தியமற்ற பல மக்கள் நலப் பணிகளை பாட்டாளி மக்கள் கட்சி செய்திருக்கிறது என்ற உண்மையை நமது எதிரிகளால்கூட மறுக்க முடியாது. தமிழ்நாட்டு அரசியலின் திசையை தீர்மானிக்கும் சக்தியாக பா.ம.க.வே திகழ்கிறது.

இடஒதுக்கீட்டில் பாமகவின் பங்கு: வன்னியர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக 20% இட ஒதுக்கீடு, 10.5% வன்னியர் இடஓதுக்கீடு, 3.5% இஸ்லாமியர் இட ஒதுக்கீடு, 3% அருந்ததியர் இட ஒதுக்கீடு என தமிழ்நாட்டளவில் 4 இட ஒதுக்கீடுகள், தேசிய அளவில் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு, மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பட்டியலினத்தவருக்கு 15%, பழங்குடியினருக்கு 7.5% இட ஒதுக்கீடு என மொத்தம் 6 இட ஒதுக்கீடுகளை வென்றெடுத்தது நாம் தான். சமூகநீதி வரலாற்று நூலை புரட்டினால் அதில் பக்கத்திற்கு பக்கம் பா.ம.க.வின் பெயர் தான் நிறைந்திருக்கும். இப்போதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவகாரத்தில், தங்கள் கடமையையும், பொறுப்பையும் மத்திய அரசிடம் அடகு வைக்கும் ஆட்சியாளர்களை அம்பலப்படுத்தி, தமிழ்நாட்டில் தமிழக அரசே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்; அது சாத்தியமே என பாமக வலியுறுத்தி வருகிறது.

மக்களவைத் தேர்தலில் ஆளுங்கட்சியின் அதிகார பலத்திற்கும், பண பலத்திற்கும் ஈடு கொடுக்க முடியாமல் நாம் வெற்றியைத் தவறவிட்டோம். ஆனாலும், மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்ற நமது உத்வேகத்திற்கும், உறுதிக்கும் அந்தத் தோல்வி ஒரு தடையாக இல்லை. இப்போதும் தமிழ்நாட்டில் மக்களின் பிரச்சினைக்காக முதலில் குரல் கொடுப்பது யார்? என்று கேட்டால் மருத்துவர் தான் என்ற பதில் தான் அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் வரும். ஒரு நதியின் பயணத்தில் இடைப்படும் மனிதர்களைப் போன்றவை தான் வெற்றியும், தோல்வியும். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் மக்கள் நலப் பணிகளை ஓர் உன்னத அரசியல் கட்சியாக நாம் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும்.

மக்களை நேரில் சென்று சந்தியுங்கள்:பாட்டாளி மக்கள் கட்சி 36ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்தத் தருணத்தில் உங்களை நான் கேட்டுக் கொள்வதெல்லாம், ‘‘மக்களை சந்தியுங்கள், அவர்களுடன் இணைந்து வாழுங்கள், அவர்களின் தேவைகளை அறியுங்கள், அவர்கள் கேட்காமலேயே அவர்களுக்காக போராடி கோரிக்கைகளை நிறைவேற்றித் தாருங்கள்’’ என்பதைத் தான். மக்களாட்சியில் மக்கள் தான் இறுதி எஜமானர்கள். நம்முடைய பணிகளை அவர்கள் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அதற்கான வெகுமதியை உரிய நேரத்தில், உரிய வகையில் தருவார்கள். அவர்களின் ஆதரவைப் பெறாமல் வெற்றி சாத்தியமல்ல. எனவே, தேர்தல் ஆண்டு, தேர்தல் இல்லாத ஆண்டு என எந்த வேறுபாடும் பார்க்காமல் 365 நாட்களும் மக்களை நேரில் சென்று சந்தியுங்கள். அவர்களின் வாழ்விலும், தாழ்விலும் இணைந்து இருங்கள். இதையே பா.ம.கவின் 36ஆம் ஆண்டு தொடக்க விழா வாக்குறுதியாக அனைவரும் ஏற்றுக் கொள்ளுங்கள்.

பாட்டாளிகளைப் பொறுத்தவரை ஜூலை மாதம் கொண்டாட்டங்களின் மாதம். ஜூலை 16ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட நாள்; ஜூலை 20ஆம் தேதி வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட நாள்; ஜூலை 25ஆம் தேதி பசுமைத்தாயகம் நாள். இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இன்னொரு நாள் கூடுதலாக சேர்ந்திருக்கிறது. அந்த நாள் ஜூலை 10ஆம் நாள். ஆம்... அன்று தான் வன்னியர் இடஒதுக்கீட்டுப் போராட்டத்தில் காவல்துறையினரின் துப்பாக்கி குண்டுகளுக்கு தங்களின் இன்னுயிரை ஈந்த மண்ணான விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

வழக்கமாக ஜூலை மாதத்தில் நாம் கொண்டாடும் 3 நாட்கள் எவ்வளவு முக்கியமானவையோ, அதே அளவுக்கு ஜூலை 10ஆம் நாளும் மிகவும் முக்கியம். இன்னும் கேட்டால் ஜூலை 10 ஆம் நாள் நடைபெறும் இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியை வெற்றி பெறச் செய்வது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் 36ஆம் ஆண்டு தொடக்க விழாவுக்கு நீங்கள் எனக்கு வழங்கும் மறக்க முடியாத பரிசாக இருக்கும். அதற்காக நான் காத்திருக்கிறேன்.

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் நாம் வெற்றி பெறுவது மிகவும் எளிதான ஒன்று தான். மக்களவைத் தேர்தலில் பணத்தை வாரி இறைத்து வெற்றி பெற்றுவிட்ட மிதப்பில் ஆளும் திமுக இருந்தாலும் கூட கள நிலைமை அவர்களுக்கு எதிராகத் தான் இருக்கிறது. விக்கிரவாண்டியில் இருந்து கூப்பிடும் தொலைவில் உள்ள கள்ளக்குறிச்சியில் விற்பனை செய்யப்பட்ட நச்சு சாராயத்தைக் குடித்து 65 பேர் உயிரிழந்தது, சமூகத்தின் அடித்தட்டில் வாழும் வன்னிய மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று அறிவித்தது, சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் அனுபவித்துவரும் துயரங்களைத் தீர்க்க நடவடிக்கை எடுக்காதது போன்றவற்றால் விக்கிரவாண்டி தொகுதி மக்கள் மத்தியில் எல்லையில்லா கோபமும், கொந்தளிப்பும் நிலவிக் கொண்டிருக்கிறது. அதை பாட்டாளிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

விக்கிரவாண்டி தொகுதியில் களப்பணியில் ஈடுபட்டிருக்கும் பாட்டாளி சொந்தங்கள் அனைவரும் ஒரு நாளைக்கு மூன்று முறையாவது அவர்கள் பணி செய்யும் பகுதிகளில் உள்ள மக்களை சந்திக்க வேண்டும். ஒவ்வொரு தரப்பு மக்களுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி என்னென்ன நன்மைகளை செய்திருக்கிறது என்பதை எடுத்துக் கூறி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டுமென கேட்டுக் கொள்ள வேண்டும். பா.ம.க.வுக்கு வாக்களிப்பதை மக்களின் அனிச்சை செயலாக மாற்ற வேண்டும்.

பா.ம.க.வின் 36 ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, பாட்டாளி சொந்தங்களை நான் மீண்டும் கேட்டுக்கொள்வது என்னவென்றால், எல்லா காலங்களிலும் மக்களைச் சந்தித்து அவர்களுக்காக உழைப்பதையும், அதன் மூலம் அவர்களின் ஆதரவைத் திரட்டுவதையும் வாடிக்கையாக்கிக் கொள்ளுங்கள். விக்கிரவாண்டி தொகுதியில் கடுமையாக உழைத்து வெற்றியை நமதாக்கி எனக்கு பரிசாக வழங்குங்கள். 36 ஆம் ஆண்டு தொடக்கவிழா கொண்டாட்டங்களின் ஒரு கட்டமாக ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு தெருக்களிலும் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடி ஏற்றப்பட வேண்டும். வாய்ப்புள்ள இடங்களில் பொதுக்கூட்டங்களை நடத்தி நமது சாதனைகளை விளக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:லண்டன் செல்லும் அண்ணாமலை? அரசியலில் இருந்து 6 மாதம் ஓய்வா?.. மேலிடத்திற்கு பறந்த கடிதம் - பின்னணி என்ன?

ABOUT THE AUTHOR

...view details