சென்னை:இந்த ஆண்டு ஜூலை 24-ம் தேதி தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. இந்த தேர்தலில் சட்டப்பேரவையில் தற்போதுள்ள பலத்தின் அடிப்படையில் திமுக கூட்டணியில் இருந்து 4 பேரும், அதிமுக கூட்டணியில் இருந்து ஒருவரும் உறுதியாக தேர்வு செய்யப்பட முடியும். 6-வது உறுப்பினர் பதவிக்கு கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு 18 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு எம்.பி.க்களின் பதவிக் காலம் சுழற்சி அடிப்படையில் முடிவடையும் நிலையில், 2025 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதியுடன் 6 பேரின் பதவிக் காலம் நிறைவடைகிறது.
திமுக சார்பில் எம்.பி.க்களாக உள்ள மூத்த வழக்கறிஞர் வில்சன், தொமுச பேரவை பொதுச்செயலாளர் சண்முகம், எம்.எம்.அப்துல்லா ஆகியோர்களின் பதவிக் காலமும், திமுக கூட்டணி சார்பில் தேர்வான மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரின் பதவி காலம் நிறைவடைகிறது. அதிமுக ஆதரவுடன் தேர்வான பாமக தலைவர் அன்புமணி, அதிமுகவின் சந்திரசேகர் ஆகியோர்களின் பதவிக் காலமும் நிறைவடைகிறது.
அதிமுக கூட்டணி சார்பில் கடந்த முறை தேர்வு செய்யப்பட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தற்போது பாஜக கூட்டணியில் இருப்பதால் அவருக்குப் பதிலாக அதிமுகவைச் சேர்ந்தவரே மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்படுவார் என தெரிகிறது. மேலும், 6-வது உறுப்பினராக, அதிமுகவின் சார்பில் 2-வது உறுப்பினரைத் தேர்வு செய்ய அதிமுகவுக்கு மேலும் சில வாக்குகள் தேவைப்படும் நிலையில் பாஜக ஆதரவுடன் அதனை கைப்பற்றலாம் என தெரிகிறது. சட்டப் பேரவைத் தேர்தலுக்கு ஓராண்டே உள்ள நிலையில், திமுக, அதிமுகவுக்கு மாநிலங்களவைத் தேர்தல் மிகுந்த சவாலாகவே பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தேமுதிகவின் 25-ம் ஆண்டு கொடி நாளான இன்று அதன் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கோயம்பேட்டுல் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சியின் கொடியை ஏற்றினார். பின்னர் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த்தின் நினைவிடத்தில் மலர்தூவி அவர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அதிமுகவுடன் கூட்டணி அமைத்த போதே கையெழுத்து இடபட்டு உறுதி செய்யப்பட்டது தான் ராஜ்ய சபா பதவி. அந்த ராஜ்யசபா தேர்தல் நாள் வரும் போது, தேமுதிக சார்பாக யார் ராஜ்யசபா செல்ல உள்ளார்கள் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்.
விஜய்யுடன் நாங்கள் கூட்டணி அமைப்போமா? என்பதை விஜய்யிடம் தான் கேட்க வேண்டும். நாங்கள் 20 ஆண்டுகள் கட்சி, இந்த கேள்வியை எங்களிடம் கேட்கக் கூடாது. ஏற்கனவே நாங்கள் எந்த கூட்டணியில் இருக்கிறோம் என்பதை ஒவ்வொரு முறையும் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறேன். அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை தொடர்பான கருத்துக்களை கூற நான் விரும்பவில்லை. ஜெயக்குமார் ஒரு கருத்தும் செங்கோட்டையன் ஒரு கருத்தும் கூறுகிறார்கள். இதில் எது உண்மை பொய் என்பதை அதிமுகவிடம் தான் கேட்க வேண்டும்.
2026-ல் தேமுதிக இருக்கும் கூட்டணி மகத்தான வெற்றி பெற்று, கேப்டன் கனவை வென்றெடுப்போம். 234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்.
இவ்வாறு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தேமுதிக துணைப் பொது செயலாளர் சுதீஷ், விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.