தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லையில் ராகுல் காந்தி ரோடு ஷோ? - செல்வப்பெருந்தகை பதில்! - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Rahul Gandhi visit Nellai: இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நெல்லையில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ள நிலையில், பொதுக்கூட்ட இடத்தை காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

ரோடு ஷோவிற்கு வாய்ப்பு
இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க நெல்லை வரும் ராகுல் காந்தி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 7, 2024, 7:49 PM IST

இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க நெல்லை வரும் ராகுல் காந்தி

திருநெல்வேலி:நெல்லை பாளையங்கோட்டை பெல் பள்ளி மைதானத்தில், வரும் ஏப்.12-ம் தேதி நடைபெற உள்ள தேர்தல் பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தொகுதிகளைச் சேர்ந்த இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் என இன்று (ஏப்.07) செய்தியாளர்களைச் சந்தித்த மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

இதனையொட்டி, இந்த மைதானத்தை மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி.தங்கபாலு, தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் ஸ்ரீவல்லபிரசாத் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் பார்வையிட்டனர். அப்போது, ஹெலிகாப்டர் இறங்கும் மைதானத்தையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து செல்வப்பெருந்தகை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வரும் ஏப்.12-ம் தேதி, நெல்லையில் பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெறும் மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

அவர் இந்த பொதுக்கூட்டத்தின் போது திருநெல்வேலி நாடாளுமன்றத்தில் போட்டியிடும் ராபர்ட் ப்ரூஸ், கன்னியாகுமரி வேட்பாளர் விஜய் வசந்த், தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழி, தென்காசி வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார், விருதுநகர் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் மற்றும் மதுரை, சிவகங்கை ஆகிய தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளார்.

கூட்டணி கட்சித் தலைவர்களும் இந்த பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார். மேலும், நெல்லையில் ரோடு ஷோ நடத்தவும் வாய்ப்பு உள்ளது” என கூறியுள்ளார்.

சென்னையில் நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்களிடம் 4 கோடி ரூபாய் கைப்பற்றியது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “அந்த ரூபாயை அவர்களிடமே வழங்கி விடுவார்கள், இது தொடர்பாக எந்தவித வழக்கும் பதிவு செய்ய மாட்டார்கள். மாறாக நோஞ்சான் வேட்பாளர், சாதாரண வேட்பாளர்களை, 50 ஆயிரத்திற்கு மேல் பணம் வைத்தவர்களை துன்பப்படுத்துவது தான் பாஜக ஸ்டைல்.

பண மதிப்பிழப்பு என்பது வேடிக்கைதான். நாட்டில் பணமே இல்லை, சர்வாதிகாரம் தான் மேலோங்கி இருக்கிறது. இதனால் தான் பாசிசம் ஒழிய வேண்டும் என்கிறோம், எந்தவித வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல் மோடி மக்களைச் சந்தித்து வாக்கு கேட்கிறார். அவர்களுக்கு கூச்சம் மாச்சம், சூடு சுரணை இல்லை.

உரிமைகளை பறிக்கும் பாஜகவோடு அதிமுக கொல்லைப்புறமாக கூட்டணி அமைத்து, அவர்களுக்கு துணை போகிறார்கள். இந்த தேர்தல் ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்கும் இடையே நடக்கும் தேர்தல். இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெறும், ஜனநாயகம் மலரும், சர்வாதிகாரம் வீழும்”, என கூறினார்.

இதையும் படிங்க: பஜ்ஜி சுட்டும்... மீன் விற்றும்... நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நாடாளுமன்ற வேட்பாளர்கள்! - Lok Sabha Election 2024

ABOUT THE AUTHOR

...view details