விருதுநகர்: நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே கட்டமாகத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. மார்ச் 20 முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியதை அடுத்து கூட்டணி, தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்ய அரசியல் கட்சிகள் தீவிரமாக பணிபுரிந்து வருகின்றன.
தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. இதில், பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், அமமுக, பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்டவை கூட்டணி அமைத்துள்ளது.
இந்த நிலையில், மார்ச் 12ஆம் தேதி அகில இந்தியச் சமத்துவ மக்கள் கட்சியை, கட்சியின் நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் பாஜகவோடு இணைத்துக் கொண்டார். சரத்குமார் தனது அரசியல் பயணத்தை 1996ல் திமுக கூட்டணியில் தொடங்கினார். 2001 ல் திமுக சார்பில் மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். அதன், பின்னர் 2006ல் மனைவி ராதிகாவுடன் அதிமுகவில் இணைந்தார்.
பின்னர், அதிமுகவிலிருந்து விலகி அகில இந்தியச் சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் கடந்த ஆகஸ்ட் 31, 2007 ல் தொடங்கினார். அதன் பின்னர், 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில், இரட்டை இலைச் சின்னத்தில், அகில இந்தியச் சமத்துவ மக்கள் கட்சி, இரு சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன் பின்னர் உட்கட்சிப் பூசல்களால் கட்சிக்குப் பின்னடைவு ஏற்பட்டது.