மதுரை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் நாராயணசாமியை ஆதரித்த முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்த தலைவருமான ஆர்.பி.உதயகுமார். வாடிப்பட்டியில் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது, “கடந்த 15 ஆண்டுகளாக தேனி பக்கமே எட்டிப் பார்க்காதவர் டிடிவி தினகரன். ஜெயலலிதாவால் நடவடிக்கை எடுக்கப்பட்டு. கட்சியில் இருந்து 10 ஆண்டுகள் ஒதுக்கிவைக்கப்பட்டவர் அவர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழ்நாட்டில் தலைகாட்ட ஆரம்பித்தார். ஆர்.கே.நகரில் 20 ரூபாய் நோட்டைக் காண்பித்து ஏமாற்றியவர், அதன்பிறகு அந்த தொகுதி பக்கமே போகவில்லை.
இதனால் மீண்டும் அங்கு நிற்க முடியாமல் கடந்த தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் நின்றார். அங்கேயும் மக்கள் அவரை நம்பாமல் நிராகரித்தனர். கடைசி புகலிடமாக தேனி தொகுதிக்கு வந்துள்ளார். தேனி மக்களும் அவரை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. டிடிவி தினகரன் வீராப்பாக சுற்றி வருகிறார். அவரின் வீராப்பு தேனி தொகுதியில் எடுபடாது.
என்னை பபூன் என்று விமர்சித்துள்ளார். அவர் சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன். நான் பபூன் தான். பபூனால் மக்களுக்கு நல்லது தான் நடக்குது, தீங்கு ஏற்படாது. ஆனால், டிடிவி தினகரன் பி.எஸ்.வீரப்பா மாதிரியான வில்லன். அவரால் அனைவருக்கும் தீமை ஏற்படும். இங்கு நாங்கள்தான் வெற்றி பெறுவோம். டிடிவி தினகரன் பெரா வழக்கில் கைதாகி சிறை செல்வார்.
ஜெயலலிதா இருந்த வரை நாங்கள் டிடிவி தினகரனைப் பார்த்து பயந்தது உண்மைதான். ஆனால், இப்போது அவர் காட்டும் பூச்சாண்டிக்கெல்லாம் புழு கூட பயப்படாது. அதிமுக தொண்டர்கள் அனைவரும் இப்போது தான் சுதந்திர காற்றைச் சுவாசிக்கிறோம். உங்களிடம் இருந்து இந்த இயக்கம் விடுதலை பெற்று இருக்கிறது. எடப்பாடி தலைமையில் சுதந்திரமாக இருக்கிறோம்.
ஜெயலலிதா இருந்த வரை உங்கள் வீட்டிற்கு காவல் நாயாக இருந்துள்ளோம். ஆனால், இப்போது சீண்டினால் சீறும் சிங்கமாக விஸ்வரூபம் எடுப்போம். எடப்பாடி பற்றியும் அவர் அவதூறாகப் பேசியுள்ளார். வாய் சவடாலை எல்லாம் மக்கள் நம்ப தயாராக இல்லை. தேனியில் டிடிவி தினகரன் மண்ணைக் கவ்வுவது உறுதி. எனவே, விரக்தியின் வெளிப்பாடாகத்தான் எங்களை கேலி செய்கிறார். டிடிவி தினகரன் எங்கு போட்டியிட்டாலும் தோற்பது உறுதி.
கடந்த தேர்தலில் நோட்டாவிற்கு கீழ் ஓட்டு வாங்கும் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்துக் கொள்வது தற்கொலைக்குச் சமம் என்று கூறிய டிடிவி தினகரன், தற்போது பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டில் 10 தொகுதிகளில் ஏறக்குறைய 9 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
ஆனால், திமுக ஏழு தொகுதிகளை கூட்டணி கட்சியிடம் கொடுத்துவிட்டு, மூன்று தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது. இன்று தேர்தல் களத்தில் திமுகவா, அதிமுகவா என்ற நிலை தான் உள்ளது. இடையில் யாருக்கும் போட்டி இல்லை. அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்” என்றார்.
இதையும் படிங்க:"திமுக பயங்கரமா பொய் சொல்லும்.. பாஜக சொல்ற பொய்யை பயங்கரமா சொல்லும்" - விந்தியா ‘பன்ச்’ பரப்புரை! - Vindhya Campaign In Pudukkottai