சென்னை:கத்தார் நாட்டு தலைநகர் தோகாவிலிருந்து கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் அதிகாலை 3 மணிக்கு தோகாவிலிருந்து சென்னைக்கு வந்துவிட்டு, அதே விமானம் மீண்டும் அதிகாலை 4 மணிக்கு சென்னையில் இருந்து தோகாவுக்கு புறப்பட்டு செல்லும்.
இந்நிலையில் இன்று அந்த விமானத்தில் சென்னையில் இருந்து தோகா செல்வதற்கு சுமார் 320 பயணிகள் இருந்தனர். அவர்கள் இன்று அதிகாலை 1.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து விட்டனர். ஆனால் தோகாவிலிருந்து அதிகாலை 3 மணிக்கு சென்னை வர வேண்டிய கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தோகாவிலிருந்து சென்னை வருவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் எதிர்முனையில் இருந்து கத்தார் செல்லும் பயணிகள் விமானமும் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் காத்திருந்தனர்.
இதையடுத்து சென்னையில் இருந்து தோகாவிற்கு இந்த விமானம் தாமதமாக காலை 6.30 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. அதன் பின்பு 7.30 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தோகாவில் இருந்து விமானம் காலை 7.00மணி வராததால் பயணிகள் ஆத்திரம் அடைந்து கடும் வாக்குவாதங்களில் ஈடுபட்டனர்.