புதுச்சேரி:யூனியன் பிரதேசமான புதுச்சேரி ஒரு நாடாளுமன்ற தொகுதியையும் 30 சட்டமன்ற தொகுதியையும் உள்ளடக்கியுள்ளது. பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்று இந்தியாவுடன் இணைந்த புதுச்சேரியில் கடந்த 1963ம் ஆண்டு தான் முதன்முதலாக நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டது. இதுவரை புதுச்சேரி 15 தேர்தல்களை சந்தித்துள்ளது.
கடந்த தேர்தல் களம்:புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 9 லட்சத்து 73 ஆயிரத்து 410 வாக்காளர்கள் இருந்த நிலையில், 2019ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 7 லட்சத்து 90 ஆயிரத்து 895 வாக்குகள் பதிவாகின. இவற்றில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வெ.வைத்திலிங்கம் 4 லட்சத்து 44 ஆயிரத்து 981 அதாவது 56.27% வாக்குகளை பெற்றார்.
என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட டாக்டர் நாராயணசாமி 2 லட்சத்து 47 ஆயிரத்து 956 வாக்குகள் அதாவது 31.36% சதவீத வாக்குகளை பெற்றார். என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் நாராயணசாமி, ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 025 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
காங்கிரஸ் கோட்டை: இதுவரை இங்கு நடைபெற்றுள்ள நாடாளுமன்றத் தேர்தல்களில், 11 முறை வென்று, புதுச்சேரியை தமது கோட்டையாக தக்கவைத்து கொண்டுள்ளது காங்கிரஸ். திமுக., பாமக., அதிமுக., என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா ஒருமுறை வெற்றிபெற்றுள்ளன. புதுச்சேரியின் முதல் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சிவப்பிரகாசம் வெற்றி பெற்றார். 1967, 1971 என தொடர்ந்து காங்கிரஸ் வெற்றி வாகையை சூடிய நிலையில் 1977ம் ஆண்டு அதிமுக சார்பில் அரவிந்த பாலாபழனூர் வெற்றிப் பெற்றார்.
மீண்டும் களம் காணும் பாஜக:2004-ஆம் ஆண்டு புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் அதிமுக, பாஜக கூட்டணியில் பாஜக வேட்பாளராக லலிதா குமாரமங்கலம் போட்டியிட்டு 1 லட்சத்து 72 ஆயிரத்து 472 வாக்குகளைப் பெற்று டெபாசிட் தொகையைத் தக்கவைத்தார். 2009 மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் விக்னேஷ்வரன் தனித்து நின்று 13 ஆயிரம் வாக்குகளைப் பெற்றார். அதன்பிறகு, தற்போதுதான் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து பாஜக களம் கண்டுள்ளது.
2024 தேர்தல் வாக்கு நிலவரம்:2024ம் ஆண்டின்படி, புதுச்சேரியில் 4 லட்சத்து 79 ஆயிரத்து 329 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 41 ஆயிரத்து 437 பெண் வாக்காளர்களும், 148 மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்களும் என மொத்தம் 10 லட்சத்து 20 ஆயிரத்து 914 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்ற 2024 தேர்தலில் 8 லட்சத்து 7 ஆயிரத்து 724 பேர் வாக்களித்தனர். மொத்த வாக்குப்பதிவு சதவீதம் 78.90.
முக்கிய வேட்பாளர்கள்: இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எம்.பி.யுமான வைத்திலிங்கம் மீண்டும் போட்டியிட்டுள்ளார். பாஜக சார்பில் மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், அதிமுக சார்பில் மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தன், நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் மேனகா ஆகியோர் களம் இறங்கியுள்ளனர்.