மதுரை: நிதி நெருக்கடி மிகுந்துள்ள தற்போதைய சூழலில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தைத் தமிழக அரசே மேற்கொள்வதுடன், அதனை உடனடியாக அரசுடைமையாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அப்பல்கலைக்கழகப் பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் பேராசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பேராசிரியர்களுக்குக் கடந்த மூன்று மாதங்களாக ஊதியம், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படாத நிலையில், கடந்த 5 நாட்களாகப் பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக முதுநிலை பதிவாளர் முனைவர் முத்தையா ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "கடந்த 5 நாட்களாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகக் கூட்டமைப்புக் குழுவின் சார்பாக இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த 2 மாதங்களாகவே ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.
துணைவேந்தர் குமார் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக இந்தப் பிரச்னையில் தலையிட்டு, உரிய அரசாணையைப் பிறப்பித்து எங்களது வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற முன்வர வேண்டும்.
தமிழக அரசு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைப் போல, காமராஜர் பல்கலைக்கழகத்தையும் அரசு பல்கலைக்கழகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். பல்கலைக்கழகத்திற்கு வரக்கூடிய வருமானத்தைத் தமிழக அரசே நிர்வகிக்க வேண்டும். அதன் அடிப்படையில் எங்களது வாழ்வாதாரத்திற்கு உரிய வழிவகை செய்ய வேண்டும். பல்கலைக்கழக வருமானம், துணைவேந்தர்களால் பராமரிக்கப்படுவதுதான் இங்கு பிரச்னையாக உள்ளது.
இதன் காரணமாக, பல்கலைக்கழகத்தின் வருமானம் குறித்து தமிழக அரசு கேள்வி கேட்க முடியாத சூழ்நிலை உள்ளது. ஆகையால், தமிழக அரசு பல்கலைக்கழகத்தை முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே சங்கங்களின் வேண்டுகோள். இதற்காக உயர்மட்டக்குழு அமைத்து உடனடித் தீர்வு காண வேண்டும். இப்போதைக்கு, தற்காலிகத் தீர்வை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் வழங்க வேண்டும். அவர் வழங்குவார் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.