சென்னை:தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2005ஆம் ஆண்டு முதல் ஆர்.சி.எச் திட்டத்தின் கீழ், தற்காலிக அடிப்படையில் 3 ஆயிரத்து 140க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் வார விடுமுறை, தேசிய விடுமுறை, மருத்துவ விடுப்பு என்று எந்த விடுமுறையும் இல்லாமல் தொடர்ந்து தினமும் 12 மணி நேரம் பணி என வேலை செய்து வருவதாகவும், இவர்களை கடும் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகி வருவதாகவும் ஆர்.சி.எச் தூய்மைப் பணியாளர்கள் நலச் சங்கத்தினர் கூறியுள்ளனர்.
மேலும் கடந்த 10 ஆண்டுகளாக வெறும் ஆயிரத்து 500 ரூபாய் மட்டுமே மாத தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருவதாகவும், சிறப்பு கால முறை ஊதியம் வழங்குவதாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 2010ஆம் ஆண்டில் அறிவித்த நிலையில் அது நடைமுறைபடுத்தப்படவில்லை என்றும், அதனைத் தொடர்ந்து 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மாவட்ட ஆட்சியர் மூலம் குறைந்த பட்ச ஊதியம் சட்டத்திருத்தப்படி, தினக்கூலி அடிப்படையில் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு, ஊதிய உயர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது என்றும், இந்த ஆணையும் நிறைவேற்றப்படவில்லை என்றும் கூறியுள்ளனர்.
பலக் கட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, தமிழ்நாடு அரசு, இவர்களில் ஒரு பகுதி தூய்மை பணியாளர்களை, தற்காலிக பல் நோக்கு மருத்துவமனை பணியாளர்களாக (MPHW) பணிநியமனம் செய்தது என்றும், மாத தொகுப்பூதியத்தை ரூபாய் 1,500லிருந்து தோராயமாக ரூபாய் 15 ஆயிரமாக உயர்த்தியது என்றும் ஆர்.சி.எச் தூய்மைப் பணியாளர்கள் நலச்சங்கத்தினர் கூறியுள்ளனர்.
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கான, காலிப் பணியிடங்கள் உருவாகும் பொழுது, எஞ்சியுள்ள ஆர்.சி.எச் தூய்மை பணியாளர்களையும் பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்களாக, பணி நியமனம் செய்து, ஊதிய உயர்வு வழங்குவதாக தமிழ்நாடு அரசு உறுதியளித்து விட்டு, அதனை நிறைவேற்றாமல் இருப்பதாகவும் கூறியுள்ளனர். அரசு ஏற்கனவே வெளியிட்ட உத்தரவின் படி, 941 பணி இடங்கள் அனுமதிக்கப்பட்டதில் 841 பணியாளர்கள் பெயர்கள் மட்டுமே பட்டியலாக வெளியிடப்பட்டதாகவும், அந்த 841 இடங்களிலும் 7க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 60க்கும் மேற்பட்டவர்களுக்கு இன்னும் பணி ஆணை வழங்கப்படவில்லை எனவும் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க:மார்பக புற்றுநோய் பாதிப்பு இவ்வளவா? தனியார் மருத்துவமனை இயக்குனர் ராஜா!
எனவே பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களாக தேர்வு செய்யப்பட்டும், இன்று வரை பணி கிடைக்காத ஆர்.சி.எச் தூய்மை பணியாளர்களுக்கு உடனடியாக பணிநியமன ஆணைகளை வழங்கிட வேண்டும் என்றும், அதோடு, அவர்களுக்கு முன் தேதியிட்டு ஊதியம் வழங்கிட வேண்டும் என்றும், காத்திருப்பு பட்டியலில் உள்ள 547 நபர்களின் பெயர் விவரங்களை வெளியிட வேண்டும். அவர்களுக்கும் விரைவாக பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களாக, பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மொத்தம் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களில் வெறும் ஆயிரத்து 345 தூய்மை பணியாளர்கள் மட்டுமே பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களாக தகுதி உள்ளவர்களாக அரசு அறிவித்துள்ளது. அரசாணை அடிப்படையில் தேர்வு பெறாமல் ஏறத்தாழ 946 பேர் உள்ளனர்.
தமிழ்நாடு அரசு தேர்வு பெற்றவர்கள் மற்றும் தேர்வு பெறாதவர்கள் அவர்களின் பெயர், தேர்வு பெறாதவர்களுக்கு அதற்கான காரணம் உள்ளிட்ட விவரங்களையும் உடனடியாக வெளியிட வேண்டும் என்றும், 60 வயது நிரம்பிய 210 ஆர்.சி.எச் தூய்மை பணியாளர்களுக்கு பணிக்கொடை அளித்து பணி ஓய்வு வழங்கவேண்டும் என்றும், அவர்களை 1500 ரூபாய் ஊதியத்தில் தொடர்ந்து வேலை வாங்குவதை தவிர்த்திட வேண்டும் என்றும், அவர்களுக்கு 2017 முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய நிலுவைத் தொகையையும் வழங்கி பணி ஓய்வு தரப்பட வேண்டும் என்றும், ஆர்.சி.எச்.தூய்மை பணியாளர்களாக பணிபுரிந்து, பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களாக பணிபுரியும் அனைவருக்கும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.
மேலும் தகுதியான அனைவரின் பெயரையும் இணைக்க வேண்டும் என்றும், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய வார விடுமுறை, தேசிய விடுமுறை அனைத்து இடங்களிலும் வழங்கப்பட வேண்டும் என்றும், இப்பணியாளர்களுக்கு மாவட்ட அளவில் பணி மாறுதல் வழங்க வேண்டும் என்றும், தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறையில், தினக்கூலி, ஒப்பந்த, தற்காலிக பணி நியமனங்களை கைவிடவேண்டும் என்றும், தற்போது பணியில் உள்ள, தினக்கூலி, தற்காலிக, ஒப்பந்தபணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்திடவேண்டும் என வலியுறுத்தி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஆர்.சி.எச் தூய்மை பணியாளர்கள் நலச்சங்கம் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவ செல்வராஜ், மாநில பொதுச் செயலாளர் டாக்டர் ஏ.ஆர். சாந்தி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்