தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சரக்கு அடிக்கலாம் வரியா'? கல்லூரி மாணவியை போனில் அழைத்த பேராசிரியர் கைது.. நெல்லையில் பரபரப்பு! - nellai professor arrest - NELLAI PROFESSOR ARREST

நெல்லையில் தனியார் கல்லூரி மாணவியை இரவில் தொடர்பு கொண்டு, மது குடிக்க வரும்படி அழைத்த பேராசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றொரு பேராசிரியரை போலீசார் தேடி வருகின்றனர்.

கைதான பேராசிரியர் ஜெபஸ்டின்
கைதான பேராசிரியர் ஜெபஸ்டின் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 14, 2024, 3:48 PM IST

திருநெல்வேலி: நெல்லை மாநகரப் பகுதியான பாளையங்கோட்டையில் அரசு உதவி பெறும் பிரபல கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 4,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு சமூகவியல் துறை பேராசிரியர்களாக பணிபுரியும் தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெபஸ்டின் (40) மற்றும் பால்ராஜ் (40) ஆகிய இருவரும், கடந்த 4ஆம் தேதி இரவில் நெல்லை மாநகரப் பகுதியில் ஒரு விடுதியில் மது குடித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் மது போதை அதிகமாகவே, நள்ளிரவு நேரத்தில் தனது துறையில் படிக்கும் மாணவி ஒருவருக்கு போன் செய்துள்ளனர். முதலில் பால்ராஜ் அந்த மாணவியிடம் ஆபாசமாக பேசிக்கொண்டிருக்க, ஜெபஸ்டின் அந்த செல்போனைப் பிடுங்கி ''நாங்கள் இரண்டு பேரும் மது குடித்துக்கொண்டிருக்கிறோம். நீயும் மது குடிக்க வா'' என்று கூறி அழைத்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, தனது பெற்றோரிடம் நடந்த சம்பவங்களைக் கூறியுள்ளார். உடனே ஆத்திரம் அடைந்த பெற்றோர், பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி புகார் அளித்தனர். மறுநாள் அந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்குவதற்குள், இந்தச் சம்பவம் தொடர்பாக நாங்கள் புகார் கொடுத்தால் எனது மகளின் படிப்பு பாதிக்கப்பட்டுவிடும், எனவே மேல் நடவடிக்கை எதுவும் வேண்டாம் என்று மாணவியின் பெற்றோர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:'ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும்'.. புயலை கிளப்பும் திருமாவளவன்..! வீடியோ டெலிட் செய்ததால் பரபரப்பு!

இதையடுத்து, அந்த புகார் மனுவை போலீசார் கிடப்பில் போட்டு விட்டனர். அதே நேரத்தில் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று மாணவியின் பெற்றோர் கூறியதை எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கிக் கொண்டு அவர்களை அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், இந்த தகவல்களை அறிந்த இந்து முன்னணி உள்ளிட்ட சில அமைப்பினர், சம்பந்தப்பட்ட பேராசிரியர்களைக் கைது செய்யாவிட்டால் நீதிமன்றத்தை நாடப்போவதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்தச் சம்பவம் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் தெரிய வரவே, உளவுத்துறை மூலம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏடிஜிபி உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில், நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஸ் குமார் மீனா விசாரணை நடத்தினார். அதில் பேராசிரியர்களான ஜெபஸ்டின், பால்ராஜ் ஆகிய 2 பேரும் மாணவிக்கு போன் செய்து ஆபாசமாக பேசியது விசாரணையில் உறுதியானது.

இதையடுத்து, நேற்று நள்ளிரவு தனிப்படை போலீசார் தூத்துக்குடி விரைந்தனர். அங்கு ஜெபஸ்டினை கைது செய்தனர். இதற்கிடையில் போலீசார் வரும் தகவல் அறிந்த பேராசிரியர் பால்ராஜ் தலைமறைவானார். அவரை தனிப்படையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் பாளையங்கோட்டை போலீசார் 2 பேராசிரியர்கள் மீதும் மாணவியிடம் ஆபாசமாக பேசியதாகக் கூறி, இந்திய தண்டனைச் சட்டம் 74, 75, 79 (5) ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details