ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக, தனியார் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றின் பணியாட்களை ஏற்றிக் கொண்டு, அந்த தொழிற்சாலையின் பேருந்து வேலூரில் இருந்து சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தது.
இந்த நிலையில், வாலாஜாப்பேட்டை அடுத்த வாணிச்சத்திரம் மேம்பாலத்தின் மீது அந்த பேருந்து சென்று கொண்டிருந்த போது, சாலை ஓரமாக ஓரங்கட்டி நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் பின்புறம் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பேருந்தில் பயணித்த சுமார் 18 ஊழியர்கள் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
உடனடியாக காயம் அடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் உதவியோடு மீட்டு சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, காயமடைந்த ஊழியர்கள் அனைவரும் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இந்த விபத்து குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையின் ஊழியர்களை கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதையும் படிங்க:செங்கல்பட்டு அருகே கோர விபத்து..4 பேர் உயிரிழப்பு