தூத்துக்குடி: ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் பாதிப்பாடைந்த குடும்ப அட்டைதார்களுக்கு தலா ரூ.10,000 அரசு நிவாரண நிதியாக வழங்க வேண்டும். மேலும், பாதிப்பின் அளவு அறிந்து விவசாயிகளுக்கு ரூ.50,000 முதல் ஒரு லட்ச ரூபாய் வழங்க வேண்டும்.
ஓட்டுக்கு கொடுப்பது போல் ரூ.2000 கொடுத்துவிட்டு தேர்தலில் வெற்றி பெறுவது போல் இல்லை இது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 2,000 என்ற தொகை போதுமானது அல்ல என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
தென்காசியில் கட்சி நிர்வாகி திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மழை வெள்ள பாதிப்பினை நேரடி களத்திற்குச் சென்று விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டோம். அங்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விளை நிலங்கள் அனைத்தும் மூழ்கி பாதிப்படைந்துள்ளது".
"அனைத்து இடங்களிலும் மழை வெள்ள சேறும், சகதியுமாக உள்ளது. டெல்டா மாவட்டங்கள் முழுவதும் பாதிப்படைந்துள்ளது. இது குறித்து எதிர்கட்சிகள் அரசிடம் கேள்வி கேட்டால், முதலமைச்சர் எதிர்கட்சிகள் வீண் விளம்பரம் தேடுவதாக கூறிகிறார்".
இதையும் படிங்க:சென்னையில் புதிதாக 41 குளங்கள்; வெள்ள பாதிப்பை தடுக்க முயற்சி!
“மக்கள் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்மடி மீது சேற்றை வாரி வீசி இருக்கிறார்கள். திமுக பேனர்கள் கிழித்திருக்கிறார்கள். இதற்கு அர்த்தம் என்ன? ஒட்டுமொத்த மக்களும் ரோட்டில் உட்கார்ந்து மறியல் செய்து இருக்கிறார்கள். அந்த அளவுக்கு திமுக ஆட்சியால் மக்கள் வெறுப்படைந்துள்ளனர்”.
“இதனை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டதான் செய்வார்கள். இதனை ஏற்றுக் கொண்டு உடனடியாக சரி செய்ய வேண்டியது ஆளும் கட்சி கடமையாகும். ஏதோ தமிழ்நாட்டில் பாலாறும், தேனாறும் ஓடுவது போல் முதலமைச்சர் எதிர்கட்சியை மதிக்காதது போல் பேசக்கூடாது. பாதிக்கப்பட்ட அத்தனை மக்களுக்கும் உடனடியாக நிவாரண நிதி வழங்க வேண்டும்”.
“மழை வெள்ளத்தை முன்னரே சரியாக திட்டமிட்டு இருந்தால் பாதிப்பை தவிர்த்திருக்கலாம். அனைத்தையும் கோட்டை விட்டு விட்டார்கள் ஆளும் கட்சி. மக்கள் உயிரைத் தவிர மற்ற அனைத்தையும் இழந்து நிற்கின்றார்கள்.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி (ETV Bharat Tamil Nadu) அவர்களுக்கு 2000 நிவாரண நிதி போதாது. புதுச்சேரி தமிழ்நாட்டை விட சிறிது. ஆனால் அங்கே நிவாரண நிதி ரூ.5,000 வழங்குகிறார்கள். எனவே, தமிழ்நாடு அரசும் குடும்ப அட்டைதார்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாயும், விவசாயிகளுக்கு 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரையும் வழங்க வேண்டும்,” என்றார்.