சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து சிறப்பு குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
மாணவி சம்பவம் எதிரொலி
பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து, பல்கலைக்கழகத்தில் புதிய கட்டுப்பாடுகளை நிர்வாகம் விதித்தது. தொடர்ந்து கடந்த ஜனவரி 6ந் தேதி முதல் வகுப்புகள் துவங்கி நடைபெற்று வருகின்றன.
முன்னதாக பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த புதர்கள் அகற்றப்பட்டு, காலியாக வைக்கப்பட்டுள்ளது. வளாகத்தில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன. மாணவர்களுக்கு உதவி புரியும் வகையில் ஹெல்ப் டெஸ்க்குகள் (Help Desk) அமைக்கப்பட்டுள்ளன.
அண்ணா பல்கலைக்கழகத்தின் முக்கிய வாயில், கோட்டூர்புரம் வாயில், அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய 3 வாயில்கள் மூலம் மட்டுமே அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் மட்டும் செல்ல முடியும். நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகேயுள்ள தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அலுவலகம் வழியாக வரும் வாயில் மூடப்பட்டது. மேலும், சுற்றுசுவர்களில் ஏற்பட்ட உடைப்புகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
பாதுகாப்பு பணியில் கூடுதலாக 15 முன்னாள் ராணுவத்தினர் சேர்க்கப்பட்டுள்ளனர். மாணவர்களின் உடல் நலத்தை பாதுகாக்கும் வகையில் 24 மணி நேரமும் ஹெல்த் சென்டர் (Health Center) செயல்பாட்டில் உள்ளது. பல்கலைக்கழகத்தில் வெளிநபர்கள் நடைப்பயிற்சிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் அடையாள அட்டை அணிந்து வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கல்வி, மன அழுத்தம், வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகளை வழங்க ஆலோசகர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஜகபர் அலி கொலை வழக்கு; குவாரி உரிமையாளர் ராமையா போலீசில் சரண்!
இந்நிலையில், அண்னா பல்கலைக்கழகத்தில் கியூ.ஆர் கோடுடன் அனுமதி வழங்கும் முறை கொண்டு வரும் பணிகளும் நடைபெற்று வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தீவிர முறைகள்
அதுகுறித்து அவர் கூறுகையில், '' பல்கலைக்கழக வளாகத்திற்குள் வருபவர்களை கண்காணிக்கவும், அவர்கள் யாரை சந்திக்கின்றனர் என்பதை உறுதிச் செய்யவும் விசிட்டர் சிஸ்டம் கியூ.ஆர் கோடுடன் கொண்டு வரப்பட உள்ளது. இதற்கான ஆப் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் இருக்கும். அதனை செல்போனில் பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் பல்கலைக்கழகத்தில் யாரை பார்க்க வேண்டும் என்பதை விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு அவர் பார்க்க விரும்பினால் அனுமதி அளிப்பார். அப்படி அனுமதி அளிக்கும் போதே அதன் விபரம் நுழைவு வாயிலில் உள்ள பாதுகாப்பு அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். பார்க்க அனுமதிப் பெற்றவர் நுழைவு வாயிலில் பாதுகாப்பு அலுவலரிடம் கியூ.ஆர் கோடு மூலம் பெற்ற அனுமதியை காண்பித்தால் அதனை அவர் ஸ்கேன் செய்துவிட்டு அனுமதிக் கொடுப்பார்.
அனுமதிப் பெற்றவர் அந்த அலுவலரையோ , மாணவர்களையோ சந்தித்து விட்டு செல்லலாம். மேலும் அனுமதிப் பெற்றவர் வேறு நபரை சந்திக்க வேண்டும் என்றால், வளாகத்தில் இருந்து அதற்கும் அனுமதிக் கேட்டு பெற்ற பின்னர் சந்திக்கலாம். இதற்கான ஆப் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது கியூ.ஆர் கோடுடன் அனுமதி வழங்கும் முறை கொண்டு வரும் பணிகளும் நடைபெற்று வருகிறது'' என அந்த அதிகாரி தெரிவித்தார்.