கரூர்:கர்நாடகாவில் உரிய தண்ணீரைத் தமிழக அரசு பெற்றுத் தரக் கோரியும் ,மேகதாது அணைக் கட்டுமான பணிகளைத் தடுத்து நிறுத்த கோரியும் , தமிழ்நாடு அனைத்து விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் நீதி கேட்டு, நேற்று திருச்சியில் இருந்து கரூர் மாவட்டம் லாலாபேட்டை, மகாதானபுரம் ஆகிய இடங்களின் வழியாகப் பேரணி நடத்தினர். இதனைத் தொடர்ந்து, கரூர் மாநகர பகுதியில் அமைந்துள்ள லைட் ஹவுஸ் கார்னர் வந்தடைந்த பேரணி, கரூர் உழவர் சந்தை வழியாகக் கரூர் பேருந்து நிலையம் அருகில் மனோகரா கார்னர் ரவுண்டானா பகுதி வந்தடைந்தது.
பின்னர், கரூர் பேருந்து நிலையம் மனோகரா கார்னர் ரவுண்டானா அருகே பேட்டியளித்த பி.ஆர்.பாண்டியன், "விவசாய நிலங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, தமிழக அரசு கைகோர்த்துக் கொண்டு காவிரி நீரைப் பெற்றுத் தர மறுக்கிறது என்றும், முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்துவதற்குத் தமிழக அரசு மறுப்பு தெரிவித்து வருவதாகத் தெரிவித்தார்.
கேரளா அரசு புதிய அணை கட்டுவதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த தமிழக முதலமைச்சர், எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் மௌனமாக இருப்பதாகவும், பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு ஆந்திர அரசைத் தமிழக அரசு அனுமதித்து வேடிக்கை பார்ப்பதாகவும், ஒட்டுமொத்தமாகத் தமிழகத்தில் உள்ள நீர்வளங்களை அழித்துவிட்டு, சிப்காட் அமைப்பதற்கு விலை நிலங்களைக் கையகப்படுத்தி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்குவதற்குத் தமிழக அரசு முனைப்புக் காட்டி வருகிறதாகக் குற்றம் சாட்டினார்
இதற்காக விவசாயிகளின் மீது குண்டர் சட்டத்தை ஏவி தமிழக அரசு ஒடுக்கப் பார்க்கிறது என்றும், டெல்டா விவசாய நிலங்களில் நிலக்கரி, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களுக்கு விவசாய நிலங்களைத் தாரை வார்த்து, பெரும் முதலாளிகளுக்கு உறுதுணையாக இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகத் தெரிவித்தார்.மேலும் காவிரி நீரைப் பெற்றுத் தர மறுத்தால் விலை நிலங்களை விவசாயிகள் விட்டுக் கொடுத்து விடுவார்கள் என்ற வக்கிர புத்தியுடன் முதலமைச்சர் உள்ளாரா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.
இந்தியா முழுவதும் விவசாயிகளின் எதிர்ப்பு எழுந்ததால், பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்த பாஜக அரசு பெரும்பான்மை இல்லாமல் மூன்றாவது முறையாக, ஆட்சி அமைத்துள்ளதாக தெரிவித்தார்.தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் விவசாயிகளை சந்திக்க மறுத்து வருவதால், தேர்தல் நேரத்தில் தக்க பாடம் புகட்டுவோம் எனவும் விவசாயிகளின் நலனை விரும்பாத அரசாக தமிழக அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.