திருப்பூர்: திருப்பூரில் கூட்டுறவுத் துறையால் நடத்தப்படும் திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் சுமார் 15 பேர் வெயிட் லிஃப்டிங் மற்றும் பவர் லிஃப்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மாணவிகள் ஒவ்வொருவரும் தங்களது எடையைவிட இருமடங்கான எடை தூக்கும் அளவுக்கு சிறப்பாக பயிற்சி பெற்று உள்ளனர். 25 கிலோ அரிசி மூட்டையை தூக்கி வைக்க ஆட்கள் தேடும் நம் ஊர் பெண்களுக்கு மத்தியில் சாதாரணமாக 100 கிலோ எடையை தூக்கி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
இந்த மாணவிகளின் திறமையைப் பார்த்து அயன் ஃப்ட்னஸ் ஆசிரியர் பிரபு இவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து வருகிறார். இதில், மாணவிகள் சங்கமித்ரா 81 கிலோ எடைப்பிரிவில் மாநில அளவில் தங்கப்பதக்கம் வென்றவர். துர்கா மாநில அளவில் 80 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றவர். நிவேதா 73 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றவர் மற்றும் ஆர்த்தி 61 கிலோ எடைப்பிரிவில், 95 கிலோவை அசால்டாக தூக்கி மாநில அளவில் வெள்ளிப்பதக்கம் வென்று இருக்கிறார்.
இது தவிர, இங்கு பயிற்சி பெரும் மாணவிகள் 15 பேருமே, வெயிட் லிஃப்டிங் மற்றும் பவர் லிஃப்டிங் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வென்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மாணவி யோகஸ்ரீ கூறுகையில், "சர்வதேச அளவில் காமன்வெல்த், ஒலிம்பிக் போன்ற போட்டிகள் வரை சென்று பவர் லிஃப்டிங்கில் சாதித்து நாட்டுக்கும், திருப்பூருக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்ற இலக்குடன் பயிற்சி பெற்று வருகிறோம். நிச்சயமாக இந்த சாதனையை செய்வோம்" என்கிறார்.
மாணவி காமாட்சி பாண்டி கூறுகையில், "வீட்டில் இருந்து வெளியே வருவதற்கே பயந்த நான் தற்போது மாநில போட்டிகளில் வெல்லுமளவுக்கு பயிற்சி பெற்று இருக்கிறேன். கட்டணமில்லாமல் பயிற்சி அளிக்கும் ஆசிரியர் பிரபுவால் தான் இது சாத்தியமானது. அரசும், தன்னார்வலர்களும் பயிற்சிக்கு உதவினால் மேலும் சாதிக்க முடியும்" என்கிறார்.