திருச்சி: திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த பொய்கை மலை வனப்பகுதியை ஒட்டிய தேசிய நெடுஞ்சாலையின் பக்கவாட்டுப் பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் மணப்பாறை நகராட்சி மற்றும் பொய்கைபட்டி ஊராட்சி பகுதிகளைச் சேர்ந்த கடைக்காரர்கள் குப்பைகளைக் கொட்டி வருகின்றனர்.
இது குறித்து, சமூக ஆர்வலர்கள் தங்களது தொடர் கோரிக்கைகளை விடுத்து வந்தனர். அதன்படி, ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர் பகல் நேரங்களில் குப்பைகளைக் கொட்டும் வாகனங்களைப் பிடித்துத் திருப்பி அனுப்பி வந்தனர். இதனால், இரவு நேரங்களில் அப்பகுதியில் குப்பைகள் மற்றும் கோழிக் கழிவுகளைக் கொட்டத் தொடங்கினர்.
இதற்கு நிரந்தரத் தீர்வு காண முடியாத ஊராட்சி நிர்வாகம் துப்புரவுப் பணியாளர்கள் மூலம் அந்த குப்பைகளை அந்த இடத்திலேயே அவ்வப்போது தீயிட்டு அழித்து வந்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் ஏற்படும் கரும்புகையால் வன விலங்குகளுக்கும், அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் அபாயம் ஏற்படும் நிலை உருவானது.
இந்த நிலையில், இரவு நேரங்களில் சட்டவிரோதமாகக் குப்பைகளைக் கொட்டுவதைக் கண்காணிக்க ஊராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத் துறை மற்றும் வனத் துறையினர் ஆகியோர் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி இதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என மீண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.