சிவகங்கை:காளையார்கோவில் பாண்டியன் கோட்டையில் பானை குறியீடுகள், ஓட்டுக்கீறல்கள், எலும்பாலான முனைக்கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சிவகங்கை தொல்நடைக்குழு தகவல் தெரிவித்துள்ளனர்.
சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவநர் புலவர் கா.காளிராசா, தலைவர் நா.சுந்தரராஜன், செயலர் இரா. நரசிம்மன், கள ஆய்வாளர் சரவணன், உறுப்பினர் காளீஸ்வரன் ஆகியோர் காளையார் கோவில் பாண்டியன் கோட்டை பகுதியில் மேற்பரப்பு கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது மேற்கண்ட தொல்லியல் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து புலவர் காளிராசா செய்தியாளர்களிடம் கூறியதாவது," திருக்கானப்பேர் என்னும் காளையார் கோவிலில் சங்க கால கோட்டை, பாண்டியன் கோட்டை என்று வழங்கப்படுகிறது. இக்கோட்டையைச் சுற்றி அகழியுடனும், நடுவில் நீராவி குளத்துடனும் மண் மேடாக 37 ஏக்கரில் இன்றும் காட்சி தருகிறது. கானப்பேர் பாண்டியன் கோட்டை பற்றிய செய்தி, புறநானூற்றில் 21ஆவது பாடலில் இடம்பெற்றுள்ளது.
இப்பகுதியை குறுநில மன்னனான வேங்கை மார்பன் ஆட்சி செய்ததும், அவனது கோட்டையை பாண்டியன் உக்கிரப் பெருவழுதி வெற்றி பெற்றதும், அக்கோட்டையின் சிறப்புகளும் பாடலில் இடம் பெறுகின்றன. இலக்கியத்தின் சான்றாக இன்றும் இக்கோட்டை காணப்படுகிறது. மேட்டுப்பகுதி முழுதும் பானை ஓடுகள் பெருமளவில் சிதறிக் கிடக்கின்றன.
சிவகங்கை தொல்நடைக் குழு அவ்வப்போது இக்கோட்டைப் பகுதியில் மேற்பரப்பு கள ஆய்வு செய்து வருகிறது. அதில் தொடர்ச்சியாக பழமையான பொருட்கள் கிடைத்து வருகின்றன. வட்டச் சில்லுகள், மேற்கூரை ஓட்டு எச்சங்கள், சங்க கால செங்கல் எச்சங்கள் தொடர்ச்சியாக கிடைத்துள்ளன.