தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அவகேடோ இனி சமவெளியிலும் பயிரிடலாம்.. காவேரி கூக்குரல் இயக்கம் - cauvery kookural movement - CAUVERY KOOKURAL MOVEMENT

Cauvery Kookural Movement: ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில், தென்னை மற்றும் டிம்பர் மர விவசாயிகளுக்காக, ‘சமவெளியில் மர வாசனை பயிர்கள் சாத்தியமே’ எனும் மாபெரும் பயிற்சி கருத்தரங்கு செப்டம்பர் 1ஆம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற உள்ளது.

தமிழ்மாறன், குமார்
தமிழ்மாறன், குமார் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2024, 7:51 PM IST

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம், ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில், தென்னை மற்றும் டிம்பர் மர விவசாயிகளுக்காக, ‘சமவெளியில் மர வாசனை பயிர்கள் சாத்தியமே’ எனும் மாபெரும் பயிற்சி கருத்தரங்கு திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ஸ்ரீலஷ்மி மஹாலில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெற உள்ளது.

தமிழ்மாறன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு, கோயம்புத்தூர் ஆடிஸ் வீதியில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இதில் காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் கலந்து கொண்டு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், "மலைப் பகுதிகளில் மட்டுமே விளையும் என்று சொல்லப்படும் மரவாசனைப் பயிர்களான சாதிக்காய், லவங்கப்பட்டை, சர்வ சுகந்தி (பிரியாணி இலை), கிராம்பு, அவகோடா ஆகியவை தகுந்த சூழலை உருவாக்கினால், சமவெளியிலிலும் தரமான முறையில் விளைவிக்க முடியும்.

மரவாசனைப் பயிர்களை சாகுபடி செய்வதன் மூலம் விவசாயிகள் தங்கள் வருமானத்தை வெகுவாக அதிகரித்துக் கொள்ள முடியும். இது குறித்த விழிப்புணர்வை விவசாயிகளுக்கு ஏற்படுத்தவும், சாகுபடி நுணுக்கங்கள், அதன் பராமரிப்பு முறைகள் மற்றும் முன்னோடி வெற்றி விவசாயிகளின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் வகையிலும் இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இக்கருத்தரங்கில் இந்திய நறுமணப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம், இந்திய மசாலா வாரியம், இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். அவர்கள் மரவாசனைப் பயிர்கள் சாகுபடி குறித்த தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குகிறார்கள்.

மேலும், உற்பத்தி செய்த பொருட்களை உலரவைத்தல், பதப்படுத்துதல் ஆகிய நுட்பங்கள் குறித்தும், சந்தை வாய்ப்புகள் மற்றும் ஏற்றுமதி குறித்தும் பேச உள்ளனர். இதனுடன் சமவெளியில் அவகாடோ மரங்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பங்கேற்று அவகாடோ சாகுபடி குறித்தும் அனுபவங்களை பகிர உள்ளார்கள்.

தென்னையில் இணை மரங்களாக மரவாசனை மரப்பயிர்களை சாகுபடி செய்யும் போது பல்லடுக்கு பலப்பயிர் முறையில் செய்வதால், குறைந்த நிலத்தில் அதிக மரங்களை வளர்க்க இயலும். மேலும், பல்வேறு பயிர்கள் உள்ளதால் தென்னையில் ஏற்படும் பூச்சி மற்றும் நோய்த்தாக்குதலும் குறையும்.

நிலத்தின் மண் வளமும் அதிகரிக்கும். தற்போது சாதிக்காய் சாகுபடிக்கு கேரளாவை விட தமிழ்நாட்டில் சாதகமான சூழ்நிலை உள்ளது. உதாரணமாக, பொள்ளாச்சியில் விளையும் சாதிக்காய்க்கு கேரள சாதிக்காயை விட அதிக விலை கிடைக்கிறது.

மரவாசனைப் பயிர்களை சமவெளியில் சாகுபடி செய்யும்போது, தமிழ்நாட்டில் மசாலா உற்பத்தி அதிகமாவதோடு, ஏற்றுமதியும் செய்ய முடியும். காவேரி நதிக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கத்தோடு ‘காவேரி கூக்குரல் இயக்கம்’ சத்குருவால் கடந்த 2019-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

இவ்வியக்கம் மூலம் காவேரி வடிநிலப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் கோடிக்கணக்கான மரங்கள் நட திட்டமிடப்பட்டது. அதிகளவில் மரங்கள் நடுவதன் மூலம் மண்ணின் தரமும், அதன் நீர்பிடிக்கும் திறனும் மேம்படும். இதனால் மழைக் காலங்களில் பொழியும் மழையானது மண்ணில் அதிகளவு சேகரிக்கப்படும். இது நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதோடு, காவேரியின் கிளை நதிகளையும், காவேரியையும் உயிர்ப்போடு வைத்திருக்க உதவும்.

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தினை ஐநாவின் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள் அங்கீகரித்து உள்ளது. குறிப்பாக, ஐநா வெளியிட்டுள்ள 'இயற்கை சார்ந்த தீர்வுகள்' என்ற சுருக்கப் பதிப்பில் காவேரி கூக்குரல் இயக்கம் இடம் பெற்றுள்ளது.

சுற்றுச்சூழல் நோக்கத்தோடு, விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் விவசாயிகள் மத்தியில் மரம் சார்ந்த விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இவ்வியக்கம் மூலம் பல்வேறு பயிற்சி கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தற்போது தென்னை மற்றும் டிம்பர் மர விவசாயிகளுக்காக மர வாசனைப் பயிர்கள் குறித்த கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. எனவே தென்னை, பாக்கு மற்றும் டிம்பர் மர விவசாயிகள் அதிக அளவில் இந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு பயன்பெற காவேரி கூக்குரல் அழைக்கிறது. கருத்தரங்கில் கலந்து கொள்ள விரும்புவோர் 94425 90081, 94425 90079 என்ற எண்களை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்" என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க :“சிகிச்சைக்கு பணம் தடையாக இருக்கக்கூடாது”.. கமலை கிராமத்தில் மலர்ந்த முதல் இரண்டு மருத்துவர்கள்! - Disability students pass Neet exam

ABOUT THE AUTHOR

...view details