கோயம்புத்தூர்:பொள்ளாச்சியை அடுத்த அம்பராம்பாளையம் பகுதியில் நித்திய பிரியா என்பவர் ஆறு மாதங்களுக்கு முன்பு வீடு வாங்கியுள்ளார். அவர் வீட்டின் அருகில் வசிக்கும் பாவா என்பவர், அவரது வீட்டின் முன்புறம் உள்ள கால்வாயில் கழிவு நீர் தேங்குவதாகக் கூறி, நித்திய பிரியா வீட்டு கழிவு நீர் குழாயை அடைத்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, நித்திய பிரியா காவல் நிலையம், சார் ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்த நிலையில், காவல்துறையினர் பலமுறை அடைக்கப்பட்டுள்ள கால்வாயை திறந்து விட்டுள்ளனர். ஆனால், தொடர்ந்து கழிவு நீர் குழாயை பாவா அடைத்துள்ளதாக தெரிகிறது.
இதனால் நித்யபிரியா கிராம சபை கூட்டத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில், ஊராட்சி மன்றத் தலைவர் சஹர்பானுபைசல், துணைத்தலைவர் லட்சுமி சிவசாமி, சுகாதாரத்துறை அதிகாரி சுதாகர் கழிவு நீர் குழாய் அடைப்பை நீக்கினர்.
அப்போது, அங்கு வந்த மக்கள் நீதி மய்யம் மாவட்ட துணைத் தலைவர் பாவா (எ) கமல் பாவா, அங்கிருந்த ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர் முன்னிலையில், பொதுமக்கள் மத்தியில் அப்படித்தான் அடைப்பேன் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அவர்களை தாக்கி கைகலப்பில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.