சென்னை:சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் கலைஞர் அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோய்த்துறை சிறப்பு மருத்துவராக பணியாற்றி வந்த மருத்துவர் பாலாஜியை (53) கத்தியால் குத்தியதாக விக்னேஷ் என்ற் இளைஞர் நேற்று கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவர் பாலாஜியை இன்று காலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்திந்து நலம் விசாரித்தார். தான் நலமுடன் இருப்பதாக அமைச்சரிடம் மருத்துவர் கூறினார். இந்த நிலையில் பல்வேறு அரசியல் தலைவர்கள் மருத்துவர் பாலாஜியை சந்தித்து இன்று நலம் விசாரித்தனர்.
மருத்துவமனை வளாகத்தில் அரசியல் தலைவர்கள் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu) அந்த வகையில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், சிபிஐ(எம்) மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
தமிழிசை சௌந்தரராஜன்:அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், “மருத்துவர் பாலாஜி பூரண குணமடைந்து வர வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன். மருத்துவர்கள் பாதுகாப்பாக இருக்க அரசு அடிப்படை கட்டமைப்பை சரி செய்ய வேண்டும். மக்களுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது குறித்து மருத்துவர்கள் நோயாளிகளுக்கும் புரியும் வகையில் கூற வேண்டும். அதற்கென புகார் பெட்டி வைக்கலாம்.
தமிழ்நாட்டில் முதல் நிகழ்வு கிடையாது 2009ஆம் ஆண்டு மருத்துவமனை பாதுகாப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது. அது இன்று காகிதத்தில் தான் இருக்கிறது. மருத்துவர்களுக்கு Helpdesk வைக்க வேண்டும். காலிபணியிடங்களை மருத்துவர்கள் நியமிக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க:நடிகை கஸ்தூரிக்கு முன்ஜாமீன் மறுப்பு! நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சிபிஐ(ம) கே. பாலகிருஷ்ணன்:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறும்போது, “இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனை பாதுகாப்பு படை என்ற தனி அமைப்பை உருவாக்க வேண்டும். நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் குறைகள் தீர்வு மையத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும். மருத்துவர்கள் ஈடுபட்டிருக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவிக்கிறது. மருத்துவர்கள் கோரிக்கைக்கு உடனடியாக அரசு செவி சாய்த்து நிறைவேற்ற வேண்டும்” என்றார்.
தேமுதிக பிரேமலதா விஜயகாந்த்:தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறும்போது, “மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மருத்துவர்களும், செவிலியர்களுக்கும் எனது ஆதரவு உள்ளது. மருத்துவர்கள் பணி சுமையின் காரணமாக பாதிக்கப்பட்டால் நோயாளிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவர்கள். மருத்துவர்கள் நோயாளிகள் என இருபுறமும் அரசு கவனம் செலுத்த வேண்டும். அரசு மருத்துவமனைகளில் மின்சாரம் இல்லாமல் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இல்லை. மருந்துகள் இல்லை என மக்கள் ரமணா பட பாணியில் அரசு மருத்துவமனைகள் குறித்து குறை சொல்லுகின்றனர். போராட்டம் நடத்தி வரக்கூடிய மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். கட்டடம் பெரிதாக இருக்கிறது. ஆனால் மருத்துவமனையில் இருக்கக்கூடிய உபகரணங்கள் உடைந்து இருக்கிறது” என்றார்.
பிடிகே கிருஷ்ணசாமி:புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, “மருத்துவர் மீது கோபப்பட்டு அவர்களை தாக்கும் மனப்பான்மையை பொதுமக்கள் மாற்ற வேண்டும். கத்தி ஒரு சென்டிமீட்டர் உள்ளே நுழைந்திருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும். மருத்துவர்கள் மீது தாக்குதல் நடந்தும் போக்கு காட்டு மிராண்டித்தனமான போக்காகும். இதை அரசு தடுக்க வேண்டும். அனைத்து மருத்துவர்களும் துப்பாக்கி ஏந்திய போலீசுடன் இருக்க முடியாது. அரசு மருத்துவமனைகளில் கூடுதல் பாதுகாப்பை அரசு ஏற்படுத்த வேண்டும்.மருத்துவர் பாலாஜிக்கு ஏற்பட்ட பாதிப்பு கண்டனத்திற்குரியது.” என்றார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்