சென்னை : விடுதலை சிறுத்தை கட்சியில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடந்து வரும் நவீனத்துவ மாற்றங்களுக்கு பின்னணி நபராக அறியப்பட்ட பிரபல தேர்தல் வியூக நிறுவனமான வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் (Voice Of Commons) நிறுவனத்தின் தலைவரான ஆதவ் அர்ஜுனாவை கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் என்கிற முக்கிய பொறுப்பிற்கு நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் திருமாவளவன்.
சமீப காலத்தில் விசிகவில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் நியமனம், பூத் கமிட்டி கூட்டம் தொடங்கி, அண்மையில் திருச்சி சிறுகனூரில், இந்தியாவே திரும்பிப் பார்க்கும் விதத்தில் மிகவும் பிரமாண்டமாக நடத்தப்பட்ட விசிகவின் ‘வெல்லும் சனநாயகம்’ மாநாடு வரை, கடந்த ஓராண்டில் விசிகவில் நிகழ்ந்து வரும் தலைகீழ் மாற்றங்களுக்கும், திருமாவளவனுக்கு பக்கபலமாகவும் செயல்பட்டு வருபவர்தான் Voice Of Commons நிறுவனத்தின் தலைவர் ஆதவ் ஆர்ஜுனா.
திமுகவுக்கு தேர்தல் வியூகங்கள் வகுத்துக் கொடுக்கும் பணிகளை மேற்கொண்டு வந்த ஆதவ் அர்ஜுனாவை விசிகவின் பக்கம் திருமாவளவன் அழைத்து வந்ததே கட்சியை பலப்படுத்தவும், கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கியுமே என்று விசிகவில் ஒரு பேச்சு இருந்து வந்தது. திருமாவளனின் இந்த எண்ணத்தை நன்கு உணர்ந்தவரான ஆதவ் ஆர்ஜுனா, திருச்சியில் நடந்த மாநாட்டில், விசிகவின் அடிப்படை உறுப்பினராக தம்மை இணைத்தும் கொண்டார்.
கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் மத்தியில் ஆதவ் அர்ஜுனாவின் திறமைகள் குறித்து திருமாவளவன் பல தருணங்களில் வெளிப்படையாகவே பேசியதாக கூறப்படுகிறது. கட்சியின் வளர்ச்சிக்கு துடிப்பாக செயல்படக்கூடிய வகையில் இளைஞராகவும், அரசியல் நுண்ணறிவு கொண்டவராகவும், தேர்தல் வியூக நிபுணராகவும் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவராகவும் உள்ள ஆதவ் அர்ஜூனாவை தனது கட்சியின் செயல்பாடுகளில் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள திருமாவளவன் திட்டமிட்டார்.