தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடத்தலில் முடிந்த கடன் பிரச்சனை..! இரவோடு இரவாக அதிரடியாக மீட்ட போலீசார்..! - தூத்துக்குடி செய்திகள்

Thoothukudi crime: தூத்துக்குடி முத்தையாபுரம் ஜங்ஷன் அருகே கடன் தகராறில், ஒருவரை அடித்து தாக்கி கடத்திச் சென்ற நபரை போலீசார் ரத்த காயங்களுடன் மீட்டனர். மேலும், கடத்தலில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடியில் கடத்தலில் முடிந்த கடன் பிரச்சனை
தூத்துக்குடியில் கடத்தலில் முடிந்த கடன் பிரச்சனை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 24, 2024, 12:31 PM IST

தூத்துக்குடி: முத்தையாபுரம் அடுத்த கிருஷ்ணா நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் கனகலிங்கம் நாகலிங்க ராஜா(29). இவர் தெர்மல் நகர் கேம்ப் 1 பகுதியில் வசிக்கும், ரசால் என்பவரின் மகன் ஜெய பிரேம் சிங்(42) என்பவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு டாடா ஏஸ் (TATA Ace) வாகனத்தை 8 லட்ச ரூபாய்க்கு சுந்தரம் பைனான்ஸ் நிறுவனத்தின் கடன் மூலம் வாங்கி கொடுத்துள்ளார்.

ஒரு மாத தவணை 23 ஆயிரத்து 33 ரூபாய் கட்ட வேண்டும் என்ற நிலையில், ஜெய பிரேம் சிங் தெர்மல்நகர் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கில் ஒன்றில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, 6 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் கடன் எடுத்து கொடுத்த நாகலிங்க ராஜா, மாத தவணையான 23 ஆயிரத்து 033 ரூபாயை ஆறு மாதங்களுக்கு கட்டியுள்ளார்.

இந்நிலையில், சிறையில் இருந்து வெளியே வந்த ஜெய பிரேம் சிங்கிசம், தான் ஆறு மாதங்களாகக் கட்டிய தவணை பணத்தை திருப்பி தரும் படியும், மேலும் கடனை ஜெய பிரேம் சிங்கின் பெயருக்கே மாற்றிவிடுமாறு கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனை அடுத்து, நேற்று (ஜன.24) இரவு 11 மணி அளவில், முத்தையாபுரம் பங்க் ஜங்ஷன் அருகில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த நாகலிங்க ராஜாவை, ஜெய பிரேம் சிங் மற்றும் அவருடன் வந்த இருவர் என 3 பேர் வழிமறித்து நாகலிங்க ராஜாவை அடித்து தாக்கி கடத்திச் சென்றதாக தெரிகிறது.

இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அத்தகவலின் அடிப்படையில், முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில், உதவி ஆய்வாளர் சிவராஜா, தனிப்பிரிவு முதன்மை காவலர் செல்வின் ராஜா, முத்தையாபுரம் தனி பிரிவு காவலர் ஜான்சன் மற்றும் தனிப்படை செந்தில்ராஜ், சுடலை மணி ஆகியோர் அடங்கிய போலீசார் குழு தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து, ஜெய பிரேம் சிங் மற்றும் அவரது கும்பலால் கடத்தப்பட்ட நாகலிங்க ராஜாவை, முத்துநகர் ஓடை பின்புறம் உள்ள பகுதியில், ரத்த காயங்களுடன் மீட்டுள்ளனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார், கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட ஜெய பிரேம் சிங், சுப்பிரமணி உள்ளிட்ட 3 பேரை தேடி வருகின்றனர். மேலும், பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் ஒருவரை அடித்து தாக்கி கடத்திச் சென்ற சம்பவம், அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:காதலை கைவிடாததால் ஆத்திரம்.. இளைஞர் அடித்துக் கொலை! ராஜஸ்தானில் களேபரம்!

ABOUT THE AUTHOR

...view details