சென்னை:எம்ஜிஆர் நகர் கனகசபை தெருவில் உள்ள சூளைப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி ஆதிலட்சுமி (64). இவருக்கு திரிலோக சுந்தரி மற்றும் சாரா என்கிற இரண்டு மகள்கள் உள்ளனர். மூதாட்டி ஆதிலட்சுமி இருவருக்கும் திருமணம் செய்துவிட்டு தனது சொத்துக்களை சரிசமமாக பிரித்துக் கொடுத்துவிட்டு வாழ்ந்து வருகிறார்.
மேலும், தன்னுடைய வாழ்வாதாரத்திற்காக மூதாட்டி வீட்டின் பகுதியை ஒட்டி உள்ள கடையை வாடகைக்கு விட்டுள்ளார். ஆனால், மூத்த மகள் திரிலோக சுந்தரி வாடகை பணத்தை தன்னிடம் தருமாறு கூறி மூதாட்டியிடம் அடிக்கடி பிரச்சனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனால் மன உளைச்சல் அடைந்த மூதாட்டி ஆதி லட்சுமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், போலீசார் குடும்ப பிரச்சினை என்கிற காரணத்தினால் புகாரை பெறாமல் சமாதானம் செய்து வைத்து விட்டு அனுப்பி வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:கோயில் பூசாரி மீது பாய்ந்த போக்சோ; 17 வயது மாணவி கர்ப்பம்!
இந்த நிலையில், கடந்த புதன்கிழமை இரவு மூதாட்டி வீட்டின் வாசல் அருகே அமர்ந்து கொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த மூத்த மகள் திரிலோக சுந்தரி திடீரென தன்னுடைய தாயை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், வாடகை பணத்தை கொடு அல்லது ஐம்பதாயிரம் பணம் உடனடியாக வேண்டுமென முடியை பிடித்து இழுத்தது மட்டுமல்லாமல், அருகில் இருந்த கயிற்றால் தாயின் கழுத்தை நெரித்து கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதனை அடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்களை சமாதானம் செய்து வைத்த நிலையில், திரிலோக சுந்தரியின் தாக்குதலால் காயமுற்ற மூதாட்டி ஆதிலட்சுமி கேகே நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு விசாரணை மேற்கொண்ட மருத்துவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலின் அடிப்படையில், எம்.ஜி.ஆர் நகர் போலீசார் மூதாட்டி ஆதிலட்சுமியிடம் புகாரினை பெற்றுக் கொண்டு, வீட்டின் அருகே இருக்கக்கூடிய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.
அதில் மகள் திரிலோக சுந்தரி தன்னுடைய தாயை சரமாரியாக தாக்குவதும் கயிறை வைத்து கழுத்தை நெரிப்பதும் போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தது. இதனை அடுத்து மகள் திரிலோக சுந்தரி மீது தாக்குதல், கொலை முயற்சி உள்ளிட்ட ஐந்து பிரிவின் கீழ் எம்ஜிஆர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்