சேலம்: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவம் எதிரொலியாக, சேலம் மாவட்டத்தில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படும் இடங்களில் கடந்த மூன்று நாட்களாக போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அந்த வகையில், ஏற்காடு ஆய்வாளர் நாகராஜ் மற்றும் மதுவிலக்கு போலீசார் நேற்று முன்தினம் மலைக் கிராமங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஏற்காடு வனப்பகுதிகளில் உள்ள 70 கிராமங்களிலும், சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை நடத்தப்பட்டது.
ஒவ்வொரு கிராமமாக போலீசார் சென்று சந்தேகப்படும் நபர்களின் வீடுகளிலும், பழைய சாராய வியாபாரிகளின் வீடுகளிலும் தீவிர சோதனை மேற்கொண்டனர். மேலும், ஆற்று ஓடைகள் மற்றும் வனப்பகுதிகளில் சாராயம் காய்ச்சப்படுகிறதா என்றும் போலீசார் கண்காணித்தனர். இந்த தேடுதல் பணி நேற்று முன்தினம் விடிய விடிய நடைபெற்றது. ஆனால் இப்பகுதியில் சாராயம் விற்பனை எதுவும் நடைபெறவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
அதேபோல கல்வராயன் மலையில் உள்ள கரியகோவில் காவல் எல்லைக்கு உட்பட்ட குன்னூர் மலைக் கிராமத்தில் நேற்று முன்தினம் சாராய விற்பனையில் ஈடுபட்டிருந்த தேவராஜன் (34) என்பவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடமிருந்து 25 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து கரியகோவில் புதூரைச் சேர்ந்த சாராய வியாபாரி பழனிசாமி (40) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 20 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.