தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விசாரணைக்கைதி பக்கவாதத்தால் பாதிப்பு.. சிறை போலீசார் காரணமா? உயர் அதிகாரிகள் விசாரணை! - Puzhal Jail issue - PUZHAL JAIL ISSUE

Puzhal Jail: புழல் சிறைக்குள் காவல்துறையினர் தாக்கியதாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட விசாரணைக் கைதிக்கு பக்கவாத பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சிறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை புழல் சிறை
சென்னை புழல் சிறை (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 7, 2024, 5:39 PM IST

சென்னை:புழல் சிறைக்குள் காவல்துறையினர் தாக்கியதாகக் கூறி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட விசாரணைக் கைதிக்கு பக்கவாதம் பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் குறித்து சிறைத்துறை உயர் அதிகாரிகள் துறை ரீதியிலான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பெரம்பலூர் மாவட்டம் ஆலம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் செல்லமுத்து - வனிதா தம்பதியின் மகன் கோகுல் (23). இவர் கடந்த இரண்டு வருடங்களாக சென்னை அடுத்துள்ள ஆவடி பகுதிக்கு உட்பட்ட மோரை கிராமத்தில், தனது உறவினரது இல்லத்தில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை செங்குன்றம் அடுத்த அலமாதி பகுதியில், சோழவரம் போலீசார் கஞ்சா வழக்கில் கோகுலை கைது செய்தனர். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட கோகுல் அன்று இரவு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட கோகுல் தவறு செய்ததாகக் கூறி சிறைக்காவலர் ஒருவர் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், தாக்கப்பட்ட சில மணி நேரத்திற்குள்ளாக கோகுலுக்கு கடுமையான தலைவலி மற்றும் வாந்தி ஏற்பட்ட நிலையில், சிறை மருத்துவர்கள் மூலம் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, அவருக்கு உடல்நிலை சரியாகாமல் இருந்ததால், கடந்த திங்கள்கிழமை புழல் சிறை காவலர்கள், கோகுலை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், இது தொடர்பாக கோகுலின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பெற்றோர் கோகுலிடம் விசாரித்த நிலையில், தனக்கு பின் தலையில் கடுமையான வலி இருப்பதாகவும், மேலும் வலது கை, கால்களை அசைக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

இதனையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோகுலுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை பக்கவாதம் ஏற்பட்டு, வலது கை, கால்கள் செயல்பாட்டை இழந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், புழல் சிறை போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், உயிருக்கு போராடி வரும் தனது மகனுக்கு உரிய நீதி வேண்டும் எனவும், தனது மகனை தாக்கிய சிறைத்துறை காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர். அதிக அளவில் போதைப் பொருட்கள் பயன்படுத்தியதால் அவருக்கு இத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், போலீசார் தாக்கவில்லை எனவும் சிறைத்துறை தரப்பில் கூறப்படுகிறது. எனவே, இது தொடர்பாக தொடர்ந்து சிறைத்துறை உயர் அதிகாரிகள் துறை ரீதியிலான விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:ஒயர் வடிவில் தங்கம் கடத்திய பயணி கைது.. திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு! - Gold Smuggling In Trichy Airport

ABOUT THE AUTHOR

...view details