கோயம்புத்தூர்:கோயம்புத்தூர் தடாகம் சாலை கே.என்.ஜி.புதூர் பகுதியில், சாலையோரத்தில் அதிகாலையில் ஒருவர் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள், இது குறித்து துடியலூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அந்த ஆணின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் மதுரை தெற்குத் தெருவைச் சேர்ந்த ஜெய்கணேஷ் (35) என்பதும், அவர் துடியலூர் அருகே சுப்பிரமணியம்பாளையம் பகுதியில் தங்கி, கூலி வேலை செய்து வருவதும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், இன்று அதிகாலை 6 மணியளவில், அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர், ஜெய்கணேஷை கத்தியால் குத்திச் சென்றதாக கூறப்படுகிறது.